சென்னை: அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே தொடர்ந்து நியமிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி மக்கள் நீதி மய்யம்  கட்சி தலைவர் கமல்ஹாசன், இதுபோன்ற நியமனத்தில்  முறைகேடுகளும், அரசியல் தலையீடுகளும் ஏற்பட வாய்ப்பு உருவாகும்  என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 2831 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வந்தன. இவற்றுக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இவ்வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, TET தேர்வில் தேர்ச்சிபெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்குக் காத்திருக்கும்போது, தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன்? குறைந்த சம்பளத்தில் ஆசிரியர் நியமனம் அவர்களது எதிர்காலத்தை மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும்.

எனவே, தற்காலிக, தொகுப்பூதிய முறைகளைக் கைவிட்டு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நிரந்தர ஆசிரியர் நியமனமானது, தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் நடக்க வாய்ப்புள்ள முறைகேடுகளையும், அரசியல் தலையீடுகளையும் தடுத்து நிறுத்தும். மாணவர்களுக்கு தரமான கல்வியையும், ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உறுதிப்படுத்தும்.

இதில் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடி கவனம் செலுத்தி, ஆசிரியர், மாணவர் நலன்களைப் பாதுகாப்பது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளது.