அமலாக்கத்துறை சார்பில் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சி.-யுமான கவிதா-வுக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி பாரதிய ராஷ்ட்ரிய சமிதி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 10 ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கவிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

பாரதிய ராஷ்ட்ரிய சமிதி-யின் டெல்லி போராட்டத்தை ஒடுக்கவே மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் தன்னை மிரட்டுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 9 ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக எனக்கு சம்மன் வழங்கப்பட்டிருப்பதை அடுத்து மார்ச் 10 ம் தேதி போராட்டம் நடத்துவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தியில் ஆட்சியில் உள்ள மக்கள் விரோத அடக்குமுறை ஆட்சியை, அதிகார வெறியர்களை டெல்லியில் இருந்து விரட்டும் வரை ஓயமாட்டோம் என்றும் சூளுரைத்துள்ளார்.

டெல்லி மாநில சாராய ஊழல் தொடர்பாக கவிதா-வுக்கு நெருக்கமானவரும் அவரது பினாமியுமான அருண் ராமச்சந்திரன் பிள்ளை அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கவிதா-வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.