ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றுமுழுமையாக கட்டுக்குள் வந்துள்ளதால்,  நாளைமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாகவும், ஜூலை 1ந்தேதி முதல் பள்ளிக்கல்லூரிகள்  தொடங்கும் என்றும்  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்ததுடன், மருந்து தட்டுப்பாடுகளும் ஏற்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளன. தினசரி பாதிப்பு 60ஆயிரம் என்ற நிலையில் தொடர்கிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை முடிவடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது பல மாநிலங்களில் 100க்கும் கீழே தொற்றுபாதிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, கொரோனா ஊரடங்கில் இருந்து ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்துக்களும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கொரோனாபாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை முழுவதுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதன்படி நாளை காலை 6 மணி முதல் தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெறப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.