சென்னை: தஞ்சை தேர் தீ விபத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக  முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில், தீப்பிடித்த எரிந்தது தேர் அல்ல சப்பரம் என புது விளக்கம் அளித்துள்ளதுடன் அரசு அனுமதி பெறவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 94வருடமாக நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழா குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுடன், காவல்துறை தீயணைப்பு துறையினரின் மெத்தனத்தினாலே தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தேர் தீ விபத்தை ஆய்வு செய்த ஐ.ஜி. பாலகிருஷ்ணன், தேர்த்திருவிழாவை முன்னிட்டு குறைந்த அழுத்த மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால் உயர்அழுத்த மின்சாரம் நிறுத்தப்படாமல் இருந்துள்ளது என்று தெரிவித்து உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக கிராமப்புறங்களில் இதுபோன்ற திருவிழாக்கள் குறித்து அந்த பகுதி விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி, மின்துறை அதிகாரி மற்றும் கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கும் தெரியப்படுத்துவது வழக்கமான நடைமுறை. இதற்கான மனு போன்றவை கொடுப்பது நடைமுறையில் கிடையாது. அதனால், தேர்த்திருவிழா நடத்த அரசு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு திசை திருப்பும் செயல். இதுமட்டுமின்றி, திருவிழாவையொட்டி குறைந்த அழுத்த மின்சாரத்தை நிறுத்திய மாநில மின்சாரத்துறை, ஏன் உயர்அழுத்த மின்சாரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் அப்பர்சாமி மடம் அமைந்துள்ளது. அப்பர் முக்தி பெற்ற தினமான சித்திரை சதய நட்சத்திரத்தில் அப்பர் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு 94-ம் ஆண்டுக்கான சித்திரை சதயவிழா நேற்று மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நள்ளிரவில் தொடங்கியது.  அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா தொடங்கியது. பல்வேறு வீதிகள் வழியாக சென்று நிலைக்கு வரும்போது தான் துயர சம்பவம் நடந்துள்ளது.

தேரின் உச்சிப்பகுதி மேலே சென்ற மின்கம்பி மீது உரசியதில் தேர் தீ பிடித்து எரிய தொடங்கியது. அடுத்த நொடியே மின்சாரம் பாய்ந்து 11 பேர் உடல் கருகி இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த துக்க சம்பவம் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கோலாகலமாக தொடங்கிய திருவிழா சோகத்தில் முடிந்தது அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

அமைச்சர் சேகர்பாபு

அரசுக்குத் தெரிவிக்காமல், கிராம மக்களே சேர்ந்து தேர்த் திருவிழாவை நடத்தியிருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.  திருவிழா நடைபெறுவது குறித்து கிராம மக்கள் தரப்பிலிருந்து அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. கிராம மக்களே ஒன்று சேர்ந்து தேர்த்திருவிழாவை நடத்தியுள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு:

அப்பர் சதயவிழா தேர் எப்போதும் போல வழக்கமான அளவிலேயே செய்யப்பட்டது. இதனிடையே, களிமேடு முதன்மைச் சாலையில் ஓர் ஆண்டுக்குள் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை ஏற்கெனவே இருந்த அளவைவிட சற்று உயரமாகப் போடப்பட்டது. இதனால்தான் தேர் மின் கம்பியில் உரசியது என்று தெரிவித்து உள்ளனர். (பொதுவாக சாலை போடும்போது, பழைய சாலையை பெயர்த்தெடுத்துவிட்டு, புதுசாலை அமைக்க வேண்டும். ஆனால், அது நகரப்பகுதிகளில் மட்டுமே கண்காணிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுவது இல்லை. இதனால் சாலையின் உயரம் உயர்ந்துகொண்டே வருகிறது)

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார் மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து களிமேடு கிராமத்திற்கு சென்ற இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தேர் வரும் வழியில் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்ததால் மின்சாரம் பாய்ந்தபோது பாதிப்பு அதிகமாகி விட்டது என தெரிவித்தனர்.

மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்

இதுகுறித்து தகவல் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உடனடியாக விரைந்து வந்து, சம்பவ இடத்தை நேரில்  பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், தேர் திருவிழாவில் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  களிமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சப்பர இழுப்புத் திருவிழா இப்போதும் நடைபெற்றது. அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் சப்பரத்தின் உச்சிப்பகுதி உரசியது. இது எப்படி உரசியது என்பது விசாரணையில் தெரிய வரும் என்று கூறியதுடன், இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

மேலும்,  இந்த விபத்து எப்படி நடந்தது என வழக்குப்பதிந்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் முழு விவரங்கள் தெரிய வரும். குறைந்த மின் அழுத்த பாதை ஏற்கெனவே அணைக்கப்பட்டிருந்தது. உயர் மின்னழுத்த பாதை மூலம் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று வியப்பு தெரிவித்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி (பொறுப்பு) பானுப்பிரியா

இந்த சம்பவம் குறித்து பேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி (பொறுப்பு) பானுப்பிரியா, முதலாவது குற்றமாக தேரோட்டத்திற்கு கோவில் நிர்வாகம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று தெரிவித்து உள்ளார். எந்தவொரு திருவிழாவாக இருந்தாலும் முதற்கட்டமாக முறையான அனுமதியை காவல் துறை, தீயணைப்பு துறையிடம் பெறவேண்டும். ஆனால் இந்த அப்பர் கோவில் திருவிழா மற்றும் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக விழாக்குழுவினர் மற்றும் நிர்வாகத்தினர் எந்தவொரு அனுமதியும் பெறவில்லை என்று தெரிவித்ததுடன்,  மேலும் தேர் புறப்பட்ட இடமானது மிகவும் குறுகிய தெருவாகும். அங்கிருந்து வந்து பிரதான சாலையில் இணையும் இடத்தில்தான் இந்த மின் விபத்து நடந்துள்ளது.  தேரில் அலங்கார பொருட்கள் அதிக அளவில் பொருத்தப்பட்டு இருந்துள்ளது.

குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தேரின் மேல் பகுதி செல்லும்போது மின்சார எச்சரிக்கை இருந்திருக்க வேண்டும். ஆனால் யாரும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. அத்துடன் குறுகிய தெருவில் இருந்து பிரதான சாலைக்கு தேர் திரும்பியபோது தேருக்கு முன்னால் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு செல்லப்பட்ட ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டு புகை கிளம்பியுள்ளது. அதுவே பெரும் விபத்துக்கு காரணமாகி விட்டது என்று கூறியதுடன்,  அதே சமயம் தேரின் மேல் பகுதி உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் அலங்கார பொருட்களில் உடனே தீப்பற்றி, அடுத்த விநாடி தேரின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஒரு சிலர் சுதாரித்துக்கொண்டு தேரில் இருந்து குதித்துள்ளனர். அவர்கள் காயங்களுடன் தப்பினர். மேலும் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தவர்களுக்கு அப்பகுதியினர் வேண்டுதலாக, கால்களில் தண்ணீரை ஊற்றியுள்ளனர். இது மின்சாரம் அவர்களின் உடலில் பரவியதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளதுடன்,  அடுத்த 5 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தேரில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு முன்னதாகவே 10 பேர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். திருவிழா நடைபெற்ற பகுதி தீயணைப்பு துறையினர் 5 நிமிடத்திற்குள் வர முடியும் என்றால், தீ விபத்து நடைபெற்ற பகுதி அருகேதான் தீயணைப்பு துறை இருந்திருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது, இதுபோன்ற ஒரு திருவிழா நடைபெற இருப்பது தீயணைப்பு துறைக்கு தெரியாதா? ஏன் முன்கூட்டியே தீயணைப்பு துறை அந்த கிராம தலைவர்களிடம் எச்சரிக்கை செய்திருக்கலாமே?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில், அந்த பகுதி மக்களும் குற்றவாளிகள்தான். இருந்தாலும், அரசு துறையினர் தங்களது கடமையை செய்ய தவறியதுடன், அந்த பகுதி கிராம மக்களை மட்டுமே குறை சொல்வதில் நியாயமில்லை.