தமிழக பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும்! புத்தக கண்காட்சி திறப்பு விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர். தகவல்..

Must read

மதுரை: தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்பட உள்ள  பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும், எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்தில் திமுக ஆட்சி செயல்படுகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில்  புத்தக கண்காட்சி-2022ஐ  தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

“திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, அனைவருக்கும் கல்வி, சம வாய்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் நலனை தலையாய கடமையாகக் கொண்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற பகுதி களிலும் அரசு நிதியுதவியுடன் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் கள் சங்கம் (BAPASI) மூலம் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் அரசு அமைப்புகளின் ஒருங்கிணைப்போடு அரசு நிதியுதவியுடன் சிறப்பாக நடத்தப்படுகிறது.

புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம். பள்ளி கல்லூரி காலங்களில் வகுப்பறைகளை “கட்” அடித்து இருந்தாலும், புத்தக வாசிப்பு பழக்கத்தை கைவிட்டதே இல்லை. இரண்டு புத்தகங்களையாவது படித்து விடுவேன். கடந்த முறை புத்தக கண்காட்சி நடைபெற்ற போது 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை விரும்பி வாங்கினேன். மறுபடியும் இந்த கண்காட்சியினை விரிவாக பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிட ஆவலாக உள்ளேன்.

பாடப்புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரிய தகவல்களை கற்றறிந்து பயன்பெற முடியும். அந்த வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவை பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசியவர்,   இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் நிதி முன்னேற்றம் அடைந்துள்ளது. நிதித்துறையில் இதுவரை 5 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன். அரசுத்துறையிலிருந்து நிதித்துறைக்கு நிதி கோரி கோப்பு அனுப்பும் முன் துறை சார்ந்த அதிகாரிகள், தலைமை செயலாளர் மற்றும் துறையின் அமைச்சர் கையெழுத்திட்ட பின்னே நிதித்துறைக்கு அனுப்பபடும் என்றார்.

விரிவான ஆய்வு நடத்தினாலும் நான் ஆராய்ந்து ஆய்வு செய்த பின் சம்பந்தப்பட்ட கோப்புக்கு ஒப்புதல் அளிப்பேன். நிதித்துறையில் செயல்பட ஊக்கமும், ஆதரவும் முதலமைச்சர் மட்டுமே வழங்குகிறார். முதல்வர் ஆதரவு இல்லையென்றால் நிதியமைச்சராக செயல்பட முடியாது.  தமிழக அரசு உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை இலக்காக வைத்து இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தவறான முறையில் 15 ஆயிரம் கோடி அளவிற்கு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், திமுக பதவி ஏற்றதும், கடந்த கால  தவறுகள் கலையப்பட்டு நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அடுத்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும் என்றவர், சமூக நீதி, பொருளாதார கொள்கையின் அடிப்படையில் நிதியை பெருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவியை உயர்த்தாமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. நிதி நிலைமை சரியான பின் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிதியுதவி உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு குடும்பத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து கொண்டு இருக்கிறோம். நிதி நிலைமை சீரானதும் வழங்கப்படும் என்றவர்,  எல்லோருக்கும் எல்லாம் எனும் தத்துவத்தில் திமுக ஆட்சி செயல்படுகிறது.

இவ்வாறு பிடிஆர் பேசினார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article