ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வாட்ஸ்அப் குரூப்புகளை முடக்க தமிழக அரசு முயற்சி : ஊடகம் குற்றச்சாட்டு

சென்னை

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வாட்ஸ்அப் குழுக்களை தமிழக அரசு முடக்கி வருவதாக ”ஸ்க்ரோல்,இன்” தகவல் வெளியிட்டுள்ளது.

செய்தி ஊடகமான “ஸ்க்ரோல் இன்” (SCROLL.IN) ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது.   அந்தக் கட்டுரையில் காணப்படும் விவரங்கள் பின் வருமாறு :

கனடா நாட்டில் வசிக்கும் 28 வயதான ஆராய்ச்சிக் கல்வி மாணவி லூயிஸ் ஷோபியாவின் கைது ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக நாடெங்கும் உள்ள மக்கள் நினைக்கலாம்.   கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி விமானத்தில் தன்னுடன் வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையை பார்த்து அந்த மாணவி மத்திய அரசை எதிர்த்து கோஷமிட்டார் என்பது மட்டுமே வெளி வந்துள்ளது.  ஆனால் இதற்குப் பின்னால் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் குறித்து பலருக்கு தெரியாது.

ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்தே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுபவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  தினமும் 10 முதல் 15 பேர் காவல்நிலையத்துக்கு அழைக்கப்பட்டு அவர்களுடைய மொபைல் சோதிக்கப்படுகிறது.  அது மட்டுமின்றி அந்த மொபைலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான செய்திகள் இருந்தால் அது குறித்து தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மே மாதம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்குப் பின் ஆலை மூடப்பட்டதாக கூறப்பட்டாலும்  ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் விரைவில் ஆலைப்பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.  இந்தப் பணிகளை முடக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் வாட்ஸ்அப் மூலம் தகவல்கள் பகிர்ந்துக் கொள்வதாக வந்த செய்தியின் அடிப்படையில் இச்சோதனைகள் நடைபெறலாம் என கருதப்படுகிறது.

இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 300 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல்கள் வந்துள்ளன.    அதை ஒட்டி இவர்கள் மீது விதி எண் 107ன் கீழ் சம்மன் அனுப்ப காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.  இந்த விதியின் மூலம் பொது அமைதிக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறி ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.   இது காவல்துறை மக்களை மிரட்டும் செயல் என வழக்கறிஞர்கள் கூறி உள்ளனர்.

முன்பு குறிப்பிட்ட மொபைல் போன் சோதனை என்பதும் இந்த வாட்ஸ்அப் குழுக்களை கண்டறிந்துஅந்த குழுக்களை கலைக்க அரசு எடுக்கும் முயற்சி என்றே இங்குள்ள மக்கள் கருதுகின்றனர்.    ஆனால் இது தனிமனித உரிமைக்கு எதிரானது என்பதை அரசு கருத்தில் கொள்வது இல்லை.

இது குறித்து மனித உரிமை ஆர்வலர் பிரிட்டோ, “ஒரு சிலர் கூடங்குள போராட்டத்தையும் இதையும் ஒன்றாக ஒப்பிடுகின்றனர்.   கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் என்பது அரசின் நிறுவனத்தை எதிர்த்து நடத்தும் போராட்டம் ஆகும்.   ஆனால் தூத்துக்குடி நிலையே வேறு.  இது முழுக்க முழுக்க தனியாருக்கு சொந்தமான ஒரு கார்பரேட் நிறுவனமாகும்.   இந்த ஆலை எதிர்ப்பை அரசு ஆதரிப்பது தேவையற்ற ஒன்றாகும்.” என தெரிவித்துள்ளார்.




English Summary
Tamil nadu govt is supporting Sterlite group by watching whatsApp : Scroll in complains