அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி கிட்டத்தட்ட 300,000 தமிழ் மக்கள் அமெரிக்கா முழுவதும் வசிக்கிறார்கள்.  நியூ ஜெர்ஸி, நியூ யார்க், கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஜார்ஜியா, இலியனாய்சு, ஃப்ளோரிடா, வாசிங்டன் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசிக்கிறார்கள்.

அமெரிக்காவில் தமிழ்க்கல்வி வளர்ச்சியை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

  1. 1995 ஆம் ஆண்டுக்கு முன்னர்.
  2. 1995ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை.
  3. 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு.

1995 ஆம் ஆண்டிற்கு முன்பு வந்தவர்கள் பெரும்பாலும் மருத்துவர்கள், பொறியாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்களாகச் சிறு எண்ணிக்கையிலிருந்தனர். அவர்கள் அனைவரும் ஆண்டிற்கு சில முறை பண்டிகை நாட்களில் சந்தித்துக் கொண்டனர். தமிழ்ச் சங்கங்களும் பெரிய அளவில் இப்போது நடப்பது போல் இயங்கவில்லை. அவர்களுடைய குழந்தைகளின் தமிழ்க்கல்வி பெரும்பாலும் வீட்டில் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்த சில அரிச்சுவடி பாடங்களுடன் நின்றுவிட்டது. முறையான கல்வி நிறுவனங்களோ, கட்டமைப்புகளோ, தமிழ் கற்பதற்கான கற்பிப்பதற்கான வசதிகளோ, பாடத்திட்டங்களோ இல்லை.

1995 ஆம் ஆண்டிற்குப் பிறகு கணிப்பொறி தொழில்நுட்ப வல்லுநர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. பெரும் எண்ணிக்கையிலான அவர்களுடைய குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க வேண்டிய அவசியமும் தேவையும் ஏற்பட்டது. 1999 ஆம் ஆண்டு கலிபோர்னியா தமிழ்க்கல்விக்கழகம் தொடங்கப்பட்டது. வேறு சில நகரங்களிலும் தமிழ் கற்றுக் கொடுக்க தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்டது. அப்பள்ளிகள் பெரும்பாலும் கோயில்களிலும் தேவாலயங்களிலும் நூலகங்களிலும் அல்லது ஒரு சிலரின் வீடுகளிலும் நடத்தப்பட்டது. சிறிய அளவில் தன்னார்வ ஆசிரியர்களுக்குத் தெரிந்த அளவிலான பாடத்திட்டங்களைக் கொண்டு அல்லது தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாடப் புத்தகங்களில் இருந்து வகுப்புகள் நடத்தப்பட்டன.

சிகாகோ நகரில் 1984ல் தொடங்கப்பட்ட தமிழ்ப் பள்ளிகள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு 2004ஆம் ஆண்டு “அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்” என்ற அமைப்பாக முறைப்படி இலியனாய்சு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு தமிழ்ப் பள்ளிகளை இணையத்தில் இணைக்கும் tamilschools.net என்ற முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதற்கிடையே 2005ஆம் ஆண்டிலிருந்து பேரவை நடத்தும் தமிழ் விழாக்களில் தமிழ் ஆசிரியர்கள், தமிழ்க் கல்வி ஆர்வலர்கள் தொடர்ந்து சந்தித்து தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு வந்தனர்.

இப்படி 2010ஆம் ஆண்டு வரை பல்வேறு வழிகளிலும் தமிழ் கற்றுக் கொடுக்க முயற்சி செய்யப்பட்டுத் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. அப்போது புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பதில் உள்ள பிரச்சினைகளை உணர முடிந்தது. அதில் முதன்மையானது இங்குள்ள குழந்தைகளுக்கு முதன்மை மொழி ஆங்கிலம் என்பதும் தமிழ் ஒரு இரண்டாம் மொழியாக வெளிநாட்டு மொழியாக மட்டுமே இருக்கிறது என்ற உண்மையும், உணர்வும் ஆகும். ஆங்கில வழியாகத் தமிழ் கற்பதால் குழந்தைகளும் தமிழை ஆங்கிலத்துடன் மொழி ஒப்பீடுகள் செய்தனர். அப்படிச் செய்ததில் தமிழ் அதிக எழுத்துக்கள் கொண்ட கற்பதற்குக் கடினமான மொழியாகவும், சிக்கலான பயன்பாட்டில் இல்லாததாக இலக்கணம் இருப்பதையும் உணர்ந்தனர். அதோடு எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் அதிக அளவிலான வேறுபாடுகள் இருப்பதை அறிந்தனர். தமிழ் கற்பிக்கும் / கற்கும் முறை வழக்கமாக அவர்கள் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வேறு வகையாக இருந்ததையும் உணர்ந்தனர். இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு இடையே பல ஆண்டுகளாக மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு வந்தனர்.  அதோடு பழைய முறையிலான பாடத்திட்டங்கள், பாடப்புத்தகங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. தமிழை முழுமையாக 8 ஆண்டுகள் கற்றுக் கொண்ட பின்னரும் அவர்களுக்கு எந்த நேரடிப் பயனும் இல்லாமல் இருந்தது. கல்லூரிகளிலோ வேலைவாய்ப்புகளிலோ சிறப்புக் கவனமோ அல்லது சலுகையோ  இல்லாமல் இருந்தது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.  அதன் ஒரு பகுதியாக 2010ஆம் ஆண்டில் அமெரிக்கத்  தமிழ்க் கல்விக் கழகம் தொடங்கப்பட்டது. அமெரிக்கச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்த பாடத் திட்டங்களும் பாடங்களும் முழுக்க முழுக்க தன்னார்வலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சிகளும், தேர்வு நடத்துவதற்கும் உதவிகள் செய்யப்பட்டது. அமெரிக்கா முழுவதும் பெரிய நகரங்களிலும் இரண்டாம் கட்ட நகரங்களிலும் முறைப்படி பல்வேறு தன்னார்வ தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. கலிபோர்னியா தமிழ்க் கல்விக் கழகமும் உலகத் தமிழ்க்கல்வி கழகமாகப் பெயர் மாற்றப்பட்டு அதன் கீழும் பல்வேறு தமிழ்ப்பள்ளிகள் இணைந்தன. 2018 ஆம் ஆண்டில் அமெரிக்கத் தமிழ் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் “அமெரிக்கத் தமிழாசிரியர் கழகம்” தொடங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு ஒரு புதிய வழியில்  தமிழ் கற்றுக்கொடுக்கும் முயற்சியோடு “அமெரிக்கத் தமிழ்மொழிக் கல்வி நிறுவனம்” தொடங்கப்பட்டது.

இப்படியான பல்வேறு தொடர் செயல்பாடுகளால் இப்போது கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட தன்னார்வத் தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. 30,000க்கும்  மேற்பட்ட மாணாக்கர்கள் ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தின் கீழ் தமிழ்க்கல்வி பயில்கின்றனர்.  இருந்தாலும் ஒரு சில தமிழ்ப்பள்ளிகளே உள்ளூர் மாவட்ட கல்வி நிலையங்களால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் படிக்கும் மாணாக்கர்களுக்கு அவர்கள் படிக்கும் உயர்நிலைப் பள்ளிகள்  மூலம் இரண்டாம் மொழிக்கான மதிப்பீட்டுப் புள்ளிகள் (language credits) வழங்குகிறது. அப்படி உள்ளூர் கல்வி மாவட்ட நிலையங்களால் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ‘இருமொழி முத்திரை” சான்றிதழ், மொழித்திறன்களை சோதிக்கும் தனியார் அமைப்புகளான AAPPL, ALTA, Avant ஆகியவை நடத்தும் தேர்வுகள் மூலமும் மதிப்பீட்டுப் புள்ளிகள், சான்றிதழ்கள் பெறலாம். அப்படியான தேர்வுகள் அனைத்தும் ACTFL வகுத்துள்ள மொழி கற்பித்தலுக்கான தரப்பாடுகளின் (standards) படியே நடத்தப்படுகிறது. அத்தரப்பாடுகள் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்ற நான்கு திறன்களை அடிப்படையாகக் கொண்டது.

எனவே, இப்போதுள்ள எழுதுவதற்கும் படிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாடத்திட்டங்களோடு, கேட்டல், பேசுதல் என்பதையும் சேர்த்துப் பாடத் திட்டங்களையும் பாடங்களையும் உருவாக்க வேண்டியது அவசியம். அதன் மூலம் மாணாக்கர்கள் உலக அளவிலான அங்கீகாரம் கொண்ட மொழித்திறனுக்கான சான்றிதழ்களையும் பெற முடியும். இப்படிப்பட்ட சான்றிதழ்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெறுவதோடு அல்லாமல் கல்லூரிச் சேர்க்கைகளுக்கும் ஒரு சில வேலை வாய்ப்புகளுக்கும் உதவக்கூடும். ACTFL நிறுவனத்தின் மொழிகளுக்கான  தரப்பாடு அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் உலக அளவிலான ஒருங்கிணைந்த தமிழ்ப் பாடத் திட்டமும் பாடங்களும் உருவாக்கும் காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கான சுட்டிகள்:-

https://www.catamilacademy.org/

https://thamizhppalli.com/

https://www.americantamilacademy.org/

http://attaonline.org/

https://americantamil.org/

https://avvaitamil.org/

https://www.actfl.org/resources/world-readiness-standards-learning-languages

https://www.actfl.org/resources/ncssfl-actfl-can-do-statements

https://sealofbiliteracy.org

https://theglobalseal.com/tamil

https://www.languagetesting.com/aappl

https://www.altalang.com/

https://avantassessment.com/

– சௌந்தர் ஜெயபால்

இணை நிறுவனர், அவ்வை தமிழ் மையம் (ATC)

இணை நிறுவனர், அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் ( ATA)

இணை நிறுவனர், அமெரிக்கத் தமிழ் ஆசிரியர் கழகம் (ATTA)