க்ரா

ந்த வருடம் நடைபெற உள்ள தாஜ் உற்சவத்தில் முகலாய வம்ச பெருமைகளுக்கு பதில் ராமரின் பெருமைகள் முன்னிறுத்தபடும் என தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் தாஜ்மகால் வளாகத்தில் தாஜ் உற்சவம் நடைபெறுவது வழக்கம் இந்த வருடம் வரும் 18 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.   இந்த உற்சவம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப் பட உள்ளது.   அது தவிர நடைபெற உள்ள நிகழ்வுகள் பற்றியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிகழ்வாக பிப்ரவரி 18ஆம் தேதி அன்று ராமர் கதையை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீபாரதி கலா கேந்திரா நிகழ்த்தும் நடன நாடகம் நடைபெற உள்ளது.  அடுத்த நாள் பாடகி மாலினி அவஸ்தியின் நாட்டுப்புறப் பாடல் நிகழ்வு நடக்க உள்ளது.  பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று பாலிவுட் திரைப்பாடல் நிகழ்வும் அதற்கு அடுத்த நாள் பிரபல கவாலி பாடகர் அஸ்லாம் சப்ரியின் கவாலியும் நடைபெறும்.   அதற்கடுத்த நாட்களில் புனேவை சேர்ந்த பிளாக் அண்ட் ஒயிட் குழுவினரின் இந்தித் திரைப்படங்களின் பழைய பாடல்கள் நிகழ்ச்சியும்,   பிப்ரவரி 23 அன்று முஷைரா (உருது கவியரங்கம்) வும் பிப்ரவரி 24ஆம் தேதி கவிசம்மேளனமும் நடைபெற உள்ளன.

இவ்வாறு ராமர் பற்றிய நிகழ்வுடன் உற்சவம் தொடங்குவதற்கு சமாஜ்வாதிக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  “பாஜக தனது வாக்குறுதிகளை நிரைவேற்றாததை திசை திருப்ப இது போல நடந்துக் கொள்கிறது.   இதை மத நோக்கில் பார்க்கக் கூடாது.  தாஜ்மகால் என்பது உலகப் பாரம்பரியமான ஒரு இடம்.   உலகில் உள்ள பலரும் அதைக் காண வருகின்றனர்.  அப்படி இருக்க அங்கு இது போல சம்பந்தமற்ற நிகழ்ச்சி நடத்துவது என்பது பிரச்னைகளை திசை திருப்ப மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும்”  எனக் கூறி உள்ளார்.

இது குறித்து உத்திரப் பிரதேச அரசு, “இந்த விவகாரத்தில் அரசின் பங்கு எதுவும் இல்லை.    இந்த உற்சவம் நடத்த ஒரு அனைத்துக் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.   அந்தக் குழுவின் முடிவுப் படி அனைத்து நிகழ்வுகளும் அமைந்துள்ளன.   இந்த உற்சவத்தின் போது தாஜ்மகாலின் சரித்திர முக்கியத்துவத்தை குறைத்து விடக்கூடாது என ஏற்கனவே அரசு இந்தக் குழுவுக்கு அறிவுரை அளித்துள்ளது.” என தெரிவித்துள்ளது.