ஐதராபாத்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலஅரசை மிரட்டும் நோக்கில் மத்தியஅரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், டெல்லி துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா,  தெலுங்கானா மாநில முதல்வரின் மகள் கவிதா  உள்பட 15 பேர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிசோடியா கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.  இந்த மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு டெல்லி கோர்ட்டில் அமலாக்க துறை தாக்கல் செய்த காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவிதா நாளை டெல்லியில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. கவிதா விசாரணைக்கு ஆஜராகும் நிலையில், விசாரணையைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தெலுங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலஅரசை மிரட்டும் நோக்கில் மத்தியஅரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. முதலமைச்சர் கேசிஆர் மகளுக்கு மத்தியஅரசு கிடுக்கிபிடி போட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.