பெய்ஜிங் :

கொரோனா வைரஸின் ஊற்றுக்காண்ணாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 95 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 5 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஓராண்டிற்கு தொடர் மருத்துவ சிகிச்சையளிக்கும் சீன அரசு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டுவந்த நோயாளிகளுக்கு வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையின் ஐ.சி.யு. பிரிவு இயக்குனர் பெங் ஜியோங் தலைமையிலான குழு சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.

இதன் முதல் கட்டம் ஜூலை மாதம் நிறைவடைந்த நிலையில், நோயாளிகளின் நுரையீரல் 90 சதவீத அளவிற்கு இன்னும் சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும், அவர்களின் நுரையீரல் சுவாசம் மற்றும் வாயு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் சராசரியாக 59 வயதைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நோயாளிகள் மூன்று மாதங்கள் ஆன நிலையிலும் ஆக்ஸிஜன் இயந்திரங்களின் உதவியை நாட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். 10 சதவீத நோயாளிகளுக்கு கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகள் மறைந்துவிட்டன என்றும் இன்னும் முழுமையாக நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கப் பெறவில்லை என்றும் பெய்ஜிங்கைச் சேர்ந்த லியாங் டெங்சியாவோ என்ற மருத்துவர் கூறுகிறார்.

கொரோனா வைரஸில் தாக்குதலில் இருந்து மீண்டாலும், நோயாளிகளுக்கு தொடர் மருத்துவ உதவி தேவை படும் என்பதும், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் நீண்ட நாட்கள் இருக்கும் என்ற இந்த ஆய்வின் முடிவு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சமடைய செய்துள்ளது.