சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மசூதியை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள மசூதியை அகற்றி அந்த நிலத்தை தேவஸ்தானத்திடம் வழங்க வேண்டும் என்று தேவஸ்தானம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் 2017 ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில் மசூதியை அகற்றிவிட்டு காலியிடத்தை தேவஸ்தானத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து அதே ஆண்டு, நுங்கம்பாக்கம் முஸ்லீம் நல சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர் மற்றும் ஜெ.கே. மகேஸ்வரி அடங்கிய பெஞ்ச் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 28 ம் தேதி இவ்வாறு தீர்ப்பு வழங்கியது.

1921 ம் ஆண்டின் வாடகைதாரர் பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் தான் கையகப்படுத்தி வைத்திருந்த கோயில் நிலத்தை வி.ஜி. ராமலிங்கம் என்பவர் தேவஸ்தானத்துக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் சிறு புகார்கள் தொடர்பான நீதிமன்ற பதிவாளரிடம் 1980 ம் ஆண்டு தனது பெயருக்கு மாற்றம் செய்திருந்தார்.

பின்னர் 1981 ம் ஆண்டு அந்த நிலத்தை நுங்கம்பாக்கம் முஸ்லீம் நல சங்கத்துக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். இந்த இடத்தில் 1982 ம் ஆண்டு மசூதி கட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோயில் நிலத்தில் மசூதி கட்டுவதை தடுக்க வேண்டும் என்றும் நிலத்தை தேவஸ்தானம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் சார்பில் அதே ஆண்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நிலத்தை நுங்கம்பாக்கம் முஸ்லீம் நல சங்கத்திற்கு விற்ற வி.ஜி. ராமலிங்கம் என்பவருக்கே நிலத்தின் மீது உரிமை இல்லை என்று நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம் என்ற சூழலில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே பள்ளிவாசல் கட்டியதை சுட்டிக்காட்டிய முதன்மை நீதிமன்றம் நீதிபதி , பள்ளிவாசலை அகற்றிவிட்டு நிலத்தை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று 1991 ம் ஆண்டு தீர்ப்பு அளித்தார்.

இதனை எதிர்த்து 1993 ம் ஆண்டு ஒருமுறையும் 1998 ம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் நுங்கம்பாக்கம் முஸ்லீம் நல சங்கம் சார்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் மசூதியை இடித்துவிட்டு நிலத்தை தேவஸ்தானத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இரண்டாவது முறையீட்டில் 2017 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில், மசூதியை இடிக்கக் கோரி முதன்மை நீதிமன்றத்தை நாடவுள்ளது.

அதேவேளையில், தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை மூலம் நிலத்துக்கான இழப்பீட்டு தொகையைக் கொடுத்து சுமூகமாக தீர்த்துக்கொள்ள நுங்கம்பாக்கம் முஸ்லீம் நல சங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.