சென்னை:

மிழகம் முழுவதும் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையிம்,  மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் விஜயபாஸ்கர்,  அரசு மருத்துவ சேவை என்பது மகத்தான சேவை. அந்த பணியினை செய்து வரும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

மருத்துவர்கள் நோயாளிகள் பாதிக்கப்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறியவர், மருத்துவர்களின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அதனால் போராட்டத்தை கைவிட்டு விட்டு வர வேண்டும் என்று அழைக்கிறோம் என்று கூறினார்.

மேலும்,  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உணர்வை தெரிவியுங்கள் என்று கூறியவர்,  மருத்துவர்களின் ஒரு பிரிவினர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

அமைச்சரின் பேச்சுவார்த்தை அழைப்பை தொடர்ந்து, மருத்துவ சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.