டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அறிவுறுத்தியுள்ள  மத்திய உள்துறை அமைச்சகம்  பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் முறை தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பதவி ஏற்றது முதல் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களும், பாலியல் வன்முறைகள், இனம் மற்றும் ஜாதி ரீதியிலான மோதல்களும் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்முறைகளுக்கு “இப்போதிருக்கும் சட்டங்களே கடுமையான தண்டனைக்கு  போதுமானது. ஆனால், அவைகள் அதிகார வர்க்கம், காவல்துறை செயல்படுத்தப்படுவதில் ஏற்படும் தாமதங்களும், நீதித்துறையின் தாமதமும் பிரச்சினைகளை மேலும் பெரிதாகி வருகின்றன.

உ.பி.மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஹத்ராஸ் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் நாடு முழுவதும் தினசரி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது உலக நாடுகளாலும், ஐ.நா. அமைப்பாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை கையாளும் முறை குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விசாரணையின் போது தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குகளை சரியான நேரத்தில் விசாரித்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது உள்பட பல வழிகாட்டுதல்களை தெரிவித்து உள்ளது.