வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர் ஜி. கமலநாதன் என்பவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாரம்பரியக் கலை ‘தெருக்கூத்து’, தற்போது ஆடி மாதம் என்பதால் வட தமிழக மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் திருவிழா நடந்து வருகிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள மேல் அரசம்பட்டு பஞ்சாயத்தை ஒட்டிய மடிகம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் 8 ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த திருவிழாவை அடுத்து அன்று இரவு ‘அர்ஜுனன் தபசு’ தெருக்கூத்து நடந்தது.

அர்ஜுனனாக மேல் அரசம்பட்டைச் சேர்ந்த ஓம் சக்தி நாடக மன்றத்தின் ஆசிரியர் ஜி. கமலநாதன் (வயது 52) நடித்துக் கொண்டிருந்தார், விடிய விடிய நடந்த நாடகத்தின் இறுதிக் காட்சிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடித்துக் கொண்டிருந்த கமலநாதன் 9 ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு திடீரென கூத்து மேடையிலேயே நிலைகுலைந்து விழுந்தார்.

இவரை அருகில் இருந்த சக கலைஞர்கள் சென்று தூக்கினர், மயக்கமுற்ற நிலையில் இருந்த கமலநாதனை அருகில் உள்ள ஓடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இருந்த மருத்துவர்கள், இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர், கூத்து மேடையிலேயே உயிரிழந்த சம்பவத்தை அறிந்த சக கலைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கூத்து நடந்து கொண்டிருக்கும் போது அதைப் படம் பிடித்த ஒருவர் மாரடைப்பால் கமலநாதன் நிலைகுலைந்து விழும் விடியோவை வாட்சப்பில் பகிர இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வீடியோ இணைப்பு ….