மகன்களை கலெகடர் மற்றும் அதிகாரி ஆக்கிய பெண் துப்புரவு தொழிலாளி

ராஜரப்பா, ஜார்க்கண்ட்

தெருவை கூட்டி சுத்தம் செய்யும் ஒரு பெண் துப்புரவு தொழிலாளி தனது மகன்களில் ஒருவரை ஐஏஎஸ் வரை படிக்க வைத்து மற்ற மகன்களையும் அதிகாரிகள் ஆக்கியுள்ளார்.

                                                மகன்களுடன் சுமித்ரா தேவி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜரப்பா நகரில் கடந்த 30 வருடங்களாக தெருவைக் கூட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் சுமித்ரா தேவி.   இவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்.  பணியின் இறுதி தினத்தன்று அவருக்கு விடை அளிப்பு விழா நடந்தது.   அப்போது சில ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடந்துள்ளன.

முதல் ஆச்சரியமாக அவரை அழைத்துச் செல்ல மூன்று கார்கள் வந்திருந்தன.    ஒரு கடைநிலை ஊழியரை அழைத்துச் செல்ல இவ்வளவு கார்களா என அதிசயத்தில் சுமித்ராவுடன் பணி புரியும் சக தொழிலாளர்கள் வியந்தனர்.   முதலில் வந்த நீல நிற காரில் இருந்து இறங்கியவர் பீகார் மாநிலத்தின் சிவான் மாவட்ட ஆட்சியர் ஆவார்.

அவர் சுமித்ரா தேவியின் காலைத் தொட்டு வணங்கிய போதுதான் அவர் சுமித்ரா தேவியின் மூன்றாம் மகன் வீரேந்திர குமார் என தெரிந்தது.   அடுத்தடுத்து வந்த கார்களில் சுமித்ரா தேவியின் முதல் மகனும் ரெயில்வே பொறியாளருமான வீரேந்திர குமார் மற்றும் மருத்துவரான இரண்டாம் மகன் தீரேந்திர குமார் ஆகியோரும் இறங்கி வந்தனர்.

ஆனந்தக் கண்ணீருடன் சுமித்ரா தேவி தனது மகன்கள ஆரத்தழுவினார்.  அவர் உரையாற்றும் போது, “பல அதிகாரிகள் வசிக்கும் வீடுகள் அடங்கிய தெருக்களை நான் 30 வருடமாக சுத்தம் செய்தேன்.  இன்று எனது மகன்கள் மூவரும் அதிகாரிகள் ஆகி உள்ளனர்.   எனது உழைப்பு வீன் போகவில்லை.  இன்று நான் முழு மன நிம்மதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags: Street cleaner in jharkhand made her sons as officers