சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், தூத்துக்குடி, கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 08:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை -திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு- வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கடலில் காற்றும் அதிக அளவில் இருக்கும் என்பதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில்  புயல் எச்சரிக்கை கூண்டு எண்1 ஏற்றப்பட்டுள்ளது.