டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தாடர்பாக  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஆன்லைன் விளையாட்டின் ஆபத்தை உணர்ந்ததால், மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் உள்பட பல மாநில முதல்வர்கள் பலரும் கடிதம் எழுதினார்கள்.  தமிழகத்திலும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வலியுறுத்தி னார்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்வது தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் பரிசீலித்து, தடை செய்யும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து,  ஆன்லைன் விளையாட்டைத் தடைசெய்யும் நோக்கில் 2020, நவம்பர் 21 அன்று எடப்படி தலைமையின அதிமுக  அரசு ஒரு அவசரத் தடைச் சட்டத்தை உருவாக்கியது. தமிழக அரசு கொண்டுவந்த தடைச் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அவர்கள் வாதத்தின்படி இது திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு; சூதாட்டம் அல்ல என்று நீதிமன்றத்திலேயே கூறினர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘ஆன்லைன் விளையாட்டுத் தடைச் சட்டம் அரசமைப்புக்கு விரோதமானது. மேலும், போதுமான காரணங்களின் அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்படவில்லை; உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைவிதிக்க முடியாது. ஆகவே, உரிய விதிமுறைகளுடன் கூடிய புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்று கூறித் தமிழக அரசின் சட்டத்தை ரத்துசெய்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான  தமிழக அரசு, ஆன்லைன் சட்டம்  குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால், இன்னும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில்,  மக்களவையில், உறுப்பினர் மஹாபலிசிங் ஆன்லைன் கேப்ம்ளிங் தடை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சந்திரசேகர், ஆன்லைன் சூதாட்டத்துக்கு இடமளிக்கும் இணையதள பக்கங்களுக்கு எதிராக மத்தியஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது  என்றவர், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.