புதுடெல்லி:
டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது நாட்டைத் தாக்கி வருகிறது. தினந்தோறும் இந்த கொடிய தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்றைய தினம் ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி உள்பட 8 மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மராட்டியத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளை கொண்டு வர மாநில அரசுகள் யோசித்து வருகின்றன.

அந்த வகையில், டெல்லியில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை டெல்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கொரோனா தடுப்பூசி மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.