மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு: சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:

மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு இருப்பதாக, மேகதா அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை கூடியுள்ள  சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான திட்ட அனுமதிக்கு  மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து  விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம்  தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும்,  மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘ தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது, இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை. முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன?  என்றவர், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது என்றும், மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது என்று கடுமையாக சாடினார்.

இந்த விவகாரம் தொடர்பாக  தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்களும் பேசிய முடித்தும்,  தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார்.  அதன்பின்னர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதும், குரல் வாக்கெடுப்பு நடத்தி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Stalin's accusation Central Government at the Assembly's Special Meeting for Megatatu dam issue, மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு: சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-=-