ரபேல் பேர விவகாரம் : சோனியா தலைமையில் பாராளுமன்ற வாசலில் போராட்டம்

டில்லி

பேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறி பாராளுமன்ற வாசலில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள்  போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்திய விமானப்படைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக விமானங்கள் வாங்க பாஜக அரசு ஒப்பந்தம் இட்டுள்ளது.   இந்த வர்த்தகத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக  காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியது.   அத்துடன் இந்த விமானம் வாங்க நடந்த பேரங்களின் விவரங்களை வெளியிட பாஜக அரசை காங்கிரஸ் கேட்டுக் கொண்டது.

ஆனால் இந்த விவரங்களை வெளியிட பாஜக அரசு மறுத்து விட்டது.   இது நாட்டின் பாதுகாப்புக் குறித்த ரகசியம் என்பதால் அதை வெளியிட முடியாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.    இதில் பாதுகாப்பு ரகசியம் ஏதுமில்லை எனவும் விலைப் பேரம்  பற்றிய விவரங்களை மட்டும் வெளியிடலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.

ஆனால் அதற்கும் பாஜக அரசு மறுத்தது.  இது குறித்து இன்று எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கேள்விகள் கேட்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அனுமதி மறுத்துள்ளார்.   அதனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடந்தது.

அப்போது இந்த ரபேல் விவகாரம் குறித்து ஒருங்கிணைந்த பாராளுமன்றக் குழு ஒன்று அமைக்க வேண்டும் என கோஷம் இடப்பட்டது.   பாராளுமன்ற வாயிலில் நடந்த இந்தப் போராட்டத்தில்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.  அந்த  பதாகைகளில் ”பாராளுமன்றக் குழு விசாரணை வேண்டும்”   “மேலும் ஊழல் வெளியாகி உள்ளது” என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

Tags: Sonia Gandhi Leads Opposition Protest Over Rafale Deal Outside Parliament