பேஸ்புக் பக்கங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றவோ அல்லது பொய் பிரச்சாரம் செய்யவோ அரசியல்வாதிகளுக்கும், உலக தலைவர்களுக்கும் அந்நிறுவனம் துணைபோவதாக பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் தனது விசாரணையில் அம்பலப்படுத்தியுள்ளது.

முகநூல் நிறுவனத்தில் போலி மற்றும் பொய் செய்திகளை பரப்பும் நபர்களை அடையாளம் காணும் பிரிவில் பணியாற்றிய சோஃபி ஜாங் எனும் பேஸ்புக்கின் முன்னாள் தரவு விஞ்ஞானி வழங்கிய தகவல்கள் அடிப்படையில் இது தெரிய வந்திருக்கிறது.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், மேற்கு ஐரோப்பா, அல்பேனியா, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, இத்தாலி, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், தென் கொரியா, பொலிவியா, ஈக்வடார், ஈராக், துனிசியா, துருக்கி, தைவான், பராகுவே, எல் சால்வடோர், டொமினிகன் குடியரசு, இந்தோனேசியா, உக்ரைன், போலந்து மற்றும் மங்கோலியா ஆகிய 25 நாடுகளில் நடந்த 30 க்கும் மேற்பட்ட அரசியல் பதிவுகளின் செயல்பாடுகள்  மற்றும் சம்பவங்கள் தொடர்பாக சோஃபி ஜாங் அளித்த ஆதாரங்களை தி கார்டியன் ஆய்வு செய்துள்ளது.

இதன் மூலம் சிறிய, ஏழை மற்றும் மேற்கத்திய நாடுகளை தவிர மற்ற நாடுகளில் பொய் பிராசரங்களுக்கு பேஸ்புக் நிறுவனம் அனுமதி வழங்கியது தெரியவந்திருக்கிறது.

அமெரிக்கா, தைவான், தென் கொரியா மற்றும் போலந்து போன்ற  நாடுகளை பாதிக்கும் அரசியல் பதிவுகள் குறித்த புகார்களை  நிவர்த்தி செய்ய அந்நிறுவனம் விரைவாக செயல்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக், மங்கோலியா, மெக்ஸிகோ மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பெரும்பகுதிகளில் இருந்து வரும் போலி பதிவுகள் குறித்து மெத்தனமாகவோ அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்துள்ளது.

2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்ய அமெரிக்க ஏஜெண்டுகள் அமெரிக்க வாக்காளர்களை ஏமாற்றுவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் நம்பத்தகாத பதிவுகளை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்க அரசியல் தொடர்பான பதிவுகளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.

ஆனால், உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்கள் பரவலாக முகநூல் பக்கங்களில் விதிகளுக்கு புறம்பாக பதிவிட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதும் இதுகுறித்து சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த சமநிலை இல்லாத மாறுபட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய சோஃபி ஜாங்-கை செப்டம்பர் 2020 ல் அவரது மோசமான செயல்திறனுக்காக பணிநீக்கம் செய்தது.

“வெளிநாட்டு தேசிய அரசாங்கங்கள் தங்கள் சொந்த குடிமக்களை தவறாக வழிநடத்த முகநூல் தளத்தை பரந்த அளவில் துஷ்பிரயோகம் செய்யத பல அப்பட்டமான முயற்சிகளை  கண்டுபிடித்ததன் காரணமாக” நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என்று தனது சக ஊழியர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் 280 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்ட பேஸ்புக் சமூக ஊடகம், பல்வேறு நாடுகளின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

போலியான பயனர்களால், பொய் மற்றும் ஆதாரமற்ற செய்திகளை  முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிகளவு பகிரப்படுவதுடன் அந்த பதிவுகளுக்கு ‘லைக்’குகளையும் அள்ளி வீசுகின்றனர். இதுபோன்ற போலி பதிவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 2018  சோஃபி ஜாங்  நியமிக்கப்பட்டார்.

இதுபோன்ற போலி பதிவுகள் பெரும்பாலும் தனிநபர்கள், வணிகங்கள் அல்லது தயாரிப்பாளர்களின் முகநூல் பக்க இடுகைகளில் தோன்றியிருப்பதை அவர் கண்டறிந்தார், இது பேஸ்புக் நிறுவனத்தின் கொள்கைக்கு விரோதமானது அல்ல, என்ற போதும் இவை அனைத்தும் போலி முகநூல் பயனர்களின்  கணக்குகள் என்பது தெரியவந்தது.

மத்திய அமெரிக்காவில் உள்ள சிறிய நாடான ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதியான ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸ், முகநூல் பக்கத்தை பின்பற்றுபவர்களின்  எண்ணிக்கையை உயர்த்துவதற்கான பிரச்சாரத்தில் ஹெர்னாண்டஸின் ஊழியர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர் அதோடு நூற்றுக்கணக்கான போலி லைக்குகளையும் வழங்கி உள்ளதை ஆகஸ்ட் 2018 ல் கண்டுபிடித்துள்ளதே இதற்கான மிக அப்பட்டமான உதாரணம்.

பேஸ்புக்கின் பயனர் கொள்கைகளில் உள்ள ஓட்டை மூலம் இது சாத்தியமானது.

அதேபோல், தற்போது இது அஜர்பைஜானின் ஆளும் கட்சியால், நடுநிலை செய்தி நிறுவனங்கள் மற்றும் அஜர்பைஜான் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் பேஸ்புக் பக்கங்களில் லட்சக் கணக்கான அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிடுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதியான ஹெர்னாண்டஸ்  நிர்வாகம் மீது பரவலான ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் இருந்தபோதும் 2017 ம் ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், அஜர்பைஜான் பத்திரிகை சுதந்திரம் மற்றும் சுதந்திர தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகார நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது முகநூல் பதிவுகள் குறித்த வெளிப்படைத்தன்மையை அறிந்துகொள்ள இவர்களது பத்திரிகை அதிகாரி, வழக்கறிஞர் மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஹெர்னாண்டஸ் மற்றும் அஜர்பைஜானின் ஆளும் கட்சி ஆகியவை பதிலளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து அந்த விஷம பிரச்சாரங்களை முகநூலில் இருந்து அகற்றியது, ஹெர்னாண்டஸ் பதிவுகளை நீக்க ஓராண்டு ஆனது என்றும் அஜர்பைஜானின் பதிவுகளை நீக்க 14 மாதங்கள் ஆனதாகவும் கூறப்படுகிறது. இருந்தபோதும், புதிய பதிவுகள் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யா, ஈரான் போன்ற அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் பதிவுகளை கண்காணிக்கவே முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஜாங் தெரிவித்தார்.

இந்தியா, அல்பேனியா, மெக்ஸிகோ, அர்ஜென்டினா, இத்தாலி, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், தென் கொரியா, பொலிவியா, ஈக்வடார், ஈராக், துனிசியா, துருக்கி, தைவான், பராகுவே, எல் சால்வடோர், டொமினிகன் குடியரசு, இந்தோனேசியா, உக்ரைன், போலந்து மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளிலும் போலி கணக்குகள் மூலம் அரசியல் பதிவுகள் பகிரப்படுவதாக நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளை தனது நிறுவன அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாக ஜாங் கூறியுள்ளார்.

இருந்தபோதும், தென் கொரியா, தைவான், உக்ரைன், இத்தாலி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் பதியப்படும் பொய் பிரச்சாரங்களுக்கு பேஸ்புக் நிறுவனம் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளது.

மற்ற நாடுகளில் நடைபெறுவதாக கூறிய குற்றச்சாட்டிற்கு பேஸ்புக் பல மாதங்கள் நடவடிக்கை எடுக்க தாமதமானது. பல சந்தர்ப்பங்களில், பேஸ்புக் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பிலிப்பைன்ஸ் அரசியல்வாதிகள் மீது போலி கணக்குகள் மூலம் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் எழுவதாக அக்டோபர் 2019 இல்,  ஜாங் கண்டுபிடித்தபோது, பேஸ்புக் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், 2020 பிப்ரவரியில் டொனால்ட் டிரம்பின் பக்கத்தில் ஒரு சிறிய அளவிலான போலி ஈடுபாட்டை உருவாக்கத் தொடங்கியபோது, நிறுவனம் அதை விரைவாக அகற்றியது என்று குற்றம்சாட்டுகிறார்.

துனிசியா, அல்பேனியா, பொலிவியா, மங்கோலியா ஆகிய நாடுகள் குறித்த குற்றச்சாட்டையும் உடனடியாக கவனிக்காமல் மெத்தனம் காட்டியது என்றும் கூறுகிறார்.

நடவடிக்கைக்கு உள்ளான பயனர்கள் மீதும் பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பின் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்பது போல் அவர்களை அனுமதிப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தங்களது நிறுவனத்தை பற்றி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேச்சுக்கள் எப்படி எழுந்தாலும் அது  நிறுவனத்திற்கான விளம்பரம் மட்டுமல்ல தங்களுக்கான வருமானமும் கூட என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது பேஸ்புக் நிறுவனம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.