ஜினி மன்ற லோகோவில் மீண்டும் ஒரு மாற்றமாக, அதில்  இருந்த பாம்பு நீக்கப்பட்டுள்ளது.

தனது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக, கடந்த 2017 டிசம்பர் 31ம் தேதி,  தான் அரசியல் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தார் ரஜினி. வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக தெரிவித்தார்.

இனி  ரஜினி ரசிகர் மன்றம் என்பது ரஜினி மக்கள் மன்றம் என்று அழைக்கப்படும் என்றதோடு, மன்றத்துக்கான லோகோ ஒன்றையும் அறிவித்தார்.

இதில் தாமரை மேல் பாபா முத்திரையும், வட்டமாக பாம்பும் இருந்தது.  தான் கல்வி பயின்ற ராமகிருஷ்ணா மடத்தின் குறியீட்டை முன்மாதிரியாக வைத்து அதே போல லோகோவை ரஜினி உருவாக்கியதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் லோகோவில் இருந்த தாமரை  நீக்கப்பட்டது. அது பாஜகவை குறிப்பதாக விமர்சனம் எழுந்ததால் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று, லோகோவில் இருந்த பாம்பு நீக்கப்பட்டது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள், “பாம்பு உருவம் குறிப்பிட்ட மதத்துக்கு எதிரானது” என்று கூறியதால் இந்த மாற்றம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே லோகோவின் வாசகங்களான, “உண்மை உழைப்பு உயர்வு” என்பது பிரபல சரவணா ஸ்டோர்ஸின் வாசகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 31ம் தேதி, கட்சி குறித்து அறிவித்த ரஜினி, தன் மன்றத்துக்கான லோகோவில் ஒரு மாதத்தில்  இரு மாற்றங்கள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், லோகோவில் உள்ள பாபா முத்திரை, தங்களது நிறுவனத்தினுடையது என்று மும்பை நிறுவனம் ஒன்று ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.