புதுடெல்லி: இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 48% சரிந்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது; நாட்டின் ஸ்மார்ட்போன் விற்பனை, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 48% சரிவைக் கண்டு, 1.73 கோடி போன்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இந்த சரிவுக்கு, கொரோனா தொற்று பரவலும், அதன் காரணமாக நாடு முடக்கப்பட்டதும் முக்கிய காரணம்.
ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள், மிகவும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஒருபுறம், உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டது. மறுபுறம், தேவை கணிசமாக குறைந்து விட்டது. இதற்கிடையே, ஆன்லைன் மற்றும் ஸ்டோர்கள் மூலமான விற்பனையும் பல இடங்களில் தடைசெய்யப்பட்டுவிட்டன. ஜூன் காலாண்டின் ஆரம்ப கட்டங்களில், உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், சயோமி, ஒப்போ போன்ற நிறுவனங்கள், ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்தன.
நாட்டில் ஸ்மார்ட்போன் சந்தையை மீட்டெடுப்பது என்பது சவாலான காரியமாக இந்த காலாண்டில் இருந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சந்தைகள் திறந்ததும் விற்பனை அதிகரித்தது.
ஆனால், உற்பத்தி குறித்த புதிய விதிமுறைகள், பணியாளர் பற்றாக்குறை ஆகியவை காரணமாக, உற்பத்தி செயல்பாடுகள் கணிசமாக சரிந்தன. இந்த காலக்கட்டத்தில், முன்னணி விற்பனையாளர்கள் என்று வருகையில், ஆப்பிள் நிறுவனம் மட்டுமே குறைந்த பாதிப்புக்கு ஆளானது. கிட்டத்தட்ட 20% அளவுக்கு மட்டுமே சரிவைக் கண்டு, 2.50 லட்சம் போன்கள் விற்பனை ஆகின என்று கூறப்பட்டுள்ளது.