டில்லி,

சிவசேனா எம்.பி. கெய்க்வாட் விமானத்தில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படாவிட்டால், மும்பையிலிருந்து விமானங்களை புறப்பட அனுமதிக்கப் போவதில்லை என அக்கட்சி எச்சரித்துள்ளது.

ஏர் இந்தியா மேலாளரை காலணியால் தாக்கிய விவகாரத்தில் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விமானங்களில் செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது.

மக்களவையில் பேசிய கெய்க்வாட், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றார், மேலும்  ஏர் இந்தியா அதிகாரிதான் முதலில் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், எம்.பி.க்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் குற்றம்சாட்டினார்.

பாதிக்கப்பட்ட தாம் தண்டனை அனுபவிப்பதாகவும், அத்துமீறிய அதிகாரி சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் அவர் கூறினார். எம்.பி. என்ற முறையில் தமது செயல் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிய கெய்க்வாட் எம்.பி, ஏர் இந்தியா அதிகாரியிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபடக்கூறினார்.

இதைத்தொடர்ந்து  கெய்க்வாட் எம்.பி மீதான தடை உத்தரவை நீக்க வலியுறுத்தி சிவசேனா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார். 

அப்போது இந்த விவகாரத்தில் தலையிட மறுக்கும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவை சிவசேனா எம்.பி.க்கள் சூழ்ந்துகொண்டதோடு கெய்க்வாட் மீதான தடை நீக்கப்படாவிட்டால் மும்பையிலிருந்து எந்த விமானத்தையும் பறக்க விட மாட்டோம் என்றும் எச்சரித்தனர்.

இதையடுத்து மக்களவையில் பரபரப்பு நிலவியது.
சிவசேனா எம் பிக்களின்  மிரட்டலைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு  அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.