உ.பி. மாநிலம் மீரட் மாவட்ட மாநகராட்சியில் வந்தே மாதரம் பாட சொல்லி பாஜ கட்சியினர் மிரட்டுவதாக முஸ்லிம் கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். பாட மறுத்தால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 28ம் தேதி மீரட் மாநகராட்சி கூட்டத்தில் வந்தே மாதரம் பாடச் சொல்லி பாஜ கவுன்சிலர்கள், முஸ்லிம் கவுன்சிலர்களை மிரட்டியுள்ளனர். ‘‘நாங்கள் வந்தே மாதரத்தை மதிக்கிறோம். ஆனால், பாஜ கவுன்சிலர்களும், மேயரும் எங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. வந்தே மாதரம் பாடுவது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’’ என்று முஸ்லிம் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

வந்தே மாதரம் பாட மறுத்த கவுன்சிலர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் ஜாதி, மத அடிப்படையில் எவ்வித பாகுபாடும் இருக்காது. மாநிலத்தில் அனைத்து சமுதாய மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி இருக்கும் என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.