சென்னை,

மிழக அரசு மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் மின் திட்டத்தில் இணைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மின் கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது ஏழை மக்களுக்கு அளித்து வரும் இலவச மின்சாரம் சலுகை ரத்து செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.

தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா கடைசி வரை உதய் மின் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் இதற்கான ஒப்பந்ததில்  கையெழுத்திட்டார்.

இதன் காரணமாக தமிழகத்தில் மின் கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்படும் என தெரிகிறது. மேலும் தற்போது பெட்ரோல் டீசல் விலை அவ்வப்போது உயர்வதுபோல, மின் கட்டணமும் ஒவ்வொரு 3 மாதமும் மாறுபடும் என தெரிகிறது.

மேலும், தற்போது ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் இதுவரை 20 மாநிலங்கள் இணைந்திருந்தன. தமிழகம் 21வது மாநிலமாக ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டது.

இதன் காரணமாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைக்கும் கட்டணம் பொது மக்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குள் சில தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திட்டம் செயல்படுத்தும்போது தமிழகத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு ஏற்படும் என்றே  கூறப்படுகிறது.