ஷீரடி – கோவை: ஆபத்தான தனியார் ரயில்!” ; தொழிற்சங்கத்தினர் குமுறல்!

வரும் மே 17 முதல் இயங்கும் ஷீரடி – கோவை தனியார் ரயில், தனியார் மய ஆபத்தின் துவக்கம்” என தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.

‘பாரத் கவுரவ்’ என்கிற திட்டத்தின் கீழ், வரும் மே 17ம் தேதி கோவை – மந்த்ராலயம் – ஷீரடி ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ரயில்வே உயர் அதிகாரி ஹரிகிருஷ்ணன் ஐ.ஆர்.டி.எஸ்., என்பவர் பேசியபோது, “ நாங்கள் ரயிலை தனியாரிடம் ஒப்படைப்போம். அவர்கள் ரயில் பெட்டிகளின் உட்புறங்களை மாற்றுவார்கள், பயணிகளுக்கான உணவு வசதி முதற்கொண்டு அவர்களே பார்த்துக்கொள்வர். ரயில்வே செய்யும் ஒரே வேலை, ரயிலை இயக்குவது மட்டுமே” என்றார்.

கோவை – ஷீரடி ரயிலை இயக்கும் நிறுவனத்தின் சி.இ.ஓ. உமேஷ், “எனது நிறுவனம் மூலம் பாபாவின் பக்தர்களை அவருடைய இடத்திற்கு அழைத்துச் செல்வது பெருமை” என்றார்.

இது குறித்து மேலதிக தகவல்களுக்காக, தென்னிந்திய ரயில்வேயின் பொது மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டேன்.

அவர், தனது செயலாளரிடம் பேசச் சொன்னார். அவர், இன்னொரு அதிகாரியைத் தொடர்புகொள்ளும்படி கூறினார். அந்த அதிகாரியின் எண் எடுக்கவில்லை.

அடுத்து, ரயில்வே தொழிலாளர்களுக்கான டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கத்தின் தென்னக ரயில்வே துணைத் தலைவர் இளங்கோவனை தொடர்புகொண்டு பேசினேன்.

இளங்கோவன் – துணைத் தலைவர், டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம், தென்னக ரயில்வே

அவர், “ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘ரயில்வேயை தனியார் மயமாக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘பாரத் கவுரவ்’ திட்டத்தின்கீழ், ரயில்வேயை மறைமுகமாக தனியார் மயமாக்கும் வேலை ஆரம்பித்துவிட்டது.

அதாவது, குறிப்பிட்ட தடத்தில் ஓடும் ரயிலை தனியார் துறை குத்தகைக்கு எடுக்கும். ரயிலை இயக்கும் வேலையை மட்டுமே ரயில்வே துறை செய்யும். மற்றபடி, ரயில் வழங்கப்படும் உணவு உள்ளிட்ட இதர சேவைகள் அனைத்தும் அந்த தனியார் நிறுவனமே மேற்கொள்ளும்.

ரயில்வே துறைக்கு எந்தவித பொறுப்போ கடமையோ கிடையாது. குறிப்பாக கட்டணத்தை நிர்ணயிப்பதும், குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனமே!

ஆகவே தங்கள் விருப்பத்துக்கு கட்டணத்தை உயர்த்தும்.

இந்தியா முழுதும் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார்கள், ரயிலை இயக்க விண்ணப்பம் அளித்துள்ளனர். சில தனியார் ரயில்கள் ஓட ஆரம்பித்துள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மே 17 அன்று இயங்க இருக்கும் கோவை – ஷீரடி ரயில்தான் முதல் தனியார் ரயில்.

இதற்கிடையே, தெற்கு ரயில்வேயில், ஏழு தனி நபர்கள், பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ் ரயில்களை இயக்க பதிவு செய்துள்ளனர்.

ஆகவே இனி மெல்ல மெல்ல ரயில்வே முழுதும் தனியார் மயம் ஆகும். இது மக்களுக்கு எதிரான நடவடிக்கை” என்றார் ஆதங்கத்துடன்.

சமூக ஆர்வலர்கள், “இத்திட்டத்துக்கு பாரத் கவுரவ் என பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தியன் மட்டன் ஸ்டால், இந்தியன் செருப்பு கடை என்றெல்லாம் சிலர் தங்கள் கடைகளுக்கு பெயர் வைப்பார்கள்; ஆனால் அவை தனியார் கடைகள்தான்.

அதே போல பாரத் கவுரவ் என பெயரில் பாரத் இருந்தாலும் அது தனியார் ரயில்தான்” என்கிறார்கள்.

என்னத்தைச் சொல்வது!

– டி.வி.சோமு