அறிவோம் அந்தரங்கம்!: பாலியல் கேள்விகள் டாக்டர் காமராஜ் பதில்கள் – 2

பாலியல் சந்தேகங்கள் குறித்த கேள்விகளை  aaasomasundaram@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். உங்களது பெயர், ஊர் வெளியிடப்படாது.

ஆணுறுப்பை வலுவாக்க தேவையான உடல்பயிற்சிகள் மற்றும் உணவுமுறை  பற்றிச் சொல்ல முடியுமா?

உடற்பயிற்சியும்,சத்தான உணவும் உங்கள் பொதுவான உடல் நலத்துக்குப் பெரிதும் பயன்படும். ஆனால், ஆணுறுப்பை மட்டும் வலுவாக்குவதற்கென சிறப்பு உடற்பயிற்சியோ, உணவு முறையோ எதுவும் இல்லை. மொத்த உடம்பையுமே வலுவாக்குங்கள். ஆணுறுப்பும் தானாக வலுவாகிவிடும். மற்றபடி ஹார்மோன் குறைபாட்டினால் ஆணுறுப்பில் ஏதாவது பிரச்னை இருந்தால், அதை தகுந்த சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டியிருக்கும்.

என் வயது 24. எனது ஆணுறுப்பு விறைப்படையும்போது 12 செ.மீ. நீளமே உள்ளது.  விறைப்புத்தன்மை அடையும்போது இடதுபுறம் மேல்நோக்கி சற்று வளைகிறது. இது இயல்பான விஷயம்தானா? என்னால் நன்றாக பாலுறவில் ஈடுபட முடியுமா? பெண்ணிடம் ஆசன வாய் உறவு கொண்டால்  ஆணுறுப்பு நேராகிவிடும் என்று கூறுகிறார்களே, உண்மையா?

பாலுறவில் இன்பம் மற்றும் மனநிறைவை அடைந்திட உங்கள் உடலைப் பற்றிய ஒரு நல்ல மனநிலையும், நேர்மறையான எண்ணமும் உங்களுக்குத் தேவை. ஆனால், ஒரே ஒரு நாளில் உங்களைப் பற்றிய  எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாது. உங்களது ஆணுறுப்பைப் பற்றி நீங்கள் விவரித்த எல்லா விவரங்களுமே இயல்பானவையே. நீங்கள் முழுமையான  இன்பத்தை அனுபவிப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

 ஆணுறுப்பு வளைந்திருப்பதாக வருத்தப்பட்டிருந்தீர்கள். ஆணுறுப்பு வளைந்திருப்பதால் எந்த  பாதிப்பும் இல்லை.

எனக்கு வயது 19. நான் கடந்த மூன்று ஆண்டுகளாக கைப்பழக்கத்தில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய உறுப்பு மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் எனக்கு மீசை, தாடி வளரவில்லை. சுய இன்பம் காண்பதால் தாடி, மீசை வளர்வது பாதிக்கப்படுமா? விந்து அணுவுக்கும் தாடி. மீசை வளர்வதற்கும் தொடர்பு உண்டா?

தாடி மீசை முளைக்காததற்கும், ஆணுறுப்பு சிறியதாக உள்ளது என நீங்கள் கருவதற்கும், சுய இன்பத்தில் ஈடுபடு வதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. தாடி, மீசை வளர்வதற்கும் சிறிது தாமதம் ஏற்படலாம். அது பற்றி கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு தற்போது 19 வயதுதான் ஆகிறது. ஆணுறுப்பு இன்னும் சில ஆண்டுகளில் வளர்ந்து முழு வளர்ச்சியடையும். இப்போது அதற்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. உங்களுடைய  படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

ஒருவன் உடலுறவு கொண்டுள்ளான்  என்பதை ஆணுறுப்பை வைத்தே சொல்ல முடியும் என்கிறான் என் நண்பன். அதாவது ஆணுறுப்பில் ஒருவிதமாக சதை கிழிந்திருக்கும் என்கிறான். இது உண்மையா?

ஆணுறுப்பின் முனைப்பகுதியையும், தோலையும் இணைக்கும் கீழ்ப்பகுதி ப்ரினுலம் எனப்படும். தொடர்ந்து பாலுறவில் ஈடுபடுபவர்களுக்கு அல்லது சுய இன்பத்தில் ஈடுபடுபவர்களுக்கு இப்பகுதி சிறிது அறுந்து ரத்தம் வரலாம். இப்பகுதி அறுந்து காணப்படுவதைக் கண்டறிய முடிந்தாலும், அது பாலுறவில் ஈடுபட்டதால் வந்ததா அல்லது சுய இன்பத்தால் வந்ததா என்பதைக் கூற இயலாது.

வயதாக வயதாக விந்தின் அளவிலும், தரத்திலும் மாற்றங்கள் இருக்குமா? எந்த வயதில் விந்தின் தன்மை நன்றாக இருக்கும்?

வயதான தந்தைக்குப் பிறக்கும் குழந்தை (பத்தாயிரத்தில் ஒன்று) குறைபாடுள்ளதாக  இருக்க வாய்ப்புள்ளது. அதே போல் தாய்க்கும் வயதான பின்பு குறைபாடுள்ள குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. எனவே, முப்பது வயதுக்குள் திருமணம் செய்துகொள்வதே இச்சிக்கலைத் தவிர்ப்பதற்கான வழி.

’24 வயதாகும் இளைஞனின்  விந்து மிக நல்ல நிலையில் இருக்கிறது.அதன் பிறகு விந்தின் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது’என ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

( வரும் சனிக்கிழமை சந்திப்போம்)

 

 

Tags: sexual-doubts-questions-and-answers-by-dr-kamaraj/ 2