உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ரீட்டா பகுகுணா அமித்ஷா முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். இது உத்திரபிரதேச காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

rita

தான் காங்கிரஸ் கட்சிக்காக 24 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளதாக கூறும் ரீட்ட பகுகுணா தான் இந்த முடிவை தேசநலனுக்காகவே எடுத்துள்ளதாக கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிபு காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்திய சர்ஜிகல் தாக்குதலை காங்கிரஸ் கட்சி சந்தேகித்து கேள்வி எழுப்பியதால் தான் வெறுப்படைந்து பாஜகவில் இணைந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் பிராமண சமூகத்தவரின் ஓட்டு 14% உள்ளது. ரீட்டா பகுகுணாவுக்கு உ.பியில் பிராமணர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே அவரை பாஜகவுக்குள் இழுக்க அக்கட்சி வெகுகாலமாகவே முயன்று வருகிறது. இந்நிலையில் தன்னை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்காததால்தான் ரீட்டா பகுகுணா வெறுப்படைந்து பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
இவரது சகோதரரும், முன்னாள் உத்தரகண்ட் முதல்வருமான விஜய் பகுகுணா சமீபத்தில்தான் காங்கிரசிலிருந்து விலகி பாஜவில் இணைந்தார். இவர் உத்திரபிரதேச மாநில வளர்ச்சிக்காக ரீட்டாவும் பாஜவில் இணைய வேண்டும் சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.