ஆபத்தில் முடிந்த செல்பி மோகம் : தந்தை கவனக்குறைவால் 4வயது குழந்தை ஆற்றில் விழுந்த சோகம்

காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பார்க்க சென்றவர் செல்பி எடுக்கையில் தன் கையில் இருந்த 4வயது குழந்தையை ஆற்றில் தவறவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

4-year-old-boy

கரூர் என்.சி.சி. நகரை சேர்ந்தவர் பாபு. இவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகனான தன்வந்துடன் காவிரி ஆற்றில் கரைப்புரண்டு ஓடும் வெள்ளநீரை பார்க்க விரும்பினர். இதனால் அவர்கள் நாமக்கல் மாவட்டம் வாங்கல் ஆற்றுப்பாலத்திற்கு வந்தனர். ஆற்றில் வெள்ளநீர் பாய்ந்து ஓடுவதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். அங்கு வந்த பாபு காரை ஓரமாக நிறுத்தி விட்டு பாலத்தின் தடுப்பு சுவர் ஓரமாக நின்றபடி மகனை ஒரு கையில் தூக்கி பிடித்து கொண்டு, மற்றொரு கையில் செல்போனை வைத்துக் கொண்டு செல்பி எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கைநழுவி குழந்தை ஆற்றில் விழுந்தது. அருகில் இருந்த அவரது மனைவி மற்றும் பாபு பதறி அலறினர். குழந்தை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் துடித்தனர். பாபு எவ்வளவு கதறியும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் இறங்கி குழந்தையை காப்பாற்ற ஒருத்தரும் முன்வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகு மற்றும் பரிசல்களை கொண்டு குழந்தையை ஆற்றில் தேடி வருகின்றனர். செல்பி மோகத்தால் 4வயது குழந்தை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-