பாட்னா:
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.ல் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வந்ததால் விவசாயி அதிர்ச்சியடைந்தார்.
பீகார் தலைநகர் பாட்னா அருகே உள்ளது சீதாமர்கி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள லக்மா கிராமத்தை சேர்ந்தவர் பங்கஜ்குமார். 42 வயதாகும் இவர் ஒரு விவசாயி. இவர் சிம்ரா கிராமத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்.மில் பணம் எடுத்தார்.
அப்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்று வந்தது. இந்த பணத்தை ஒரு நபரிடம் அவர் கொடுத்தார். ஆனால், இந்த ரூபாய் நோட்டு போலி என்று கூறி அவர் ஏற்க மறுத்துவிட்டதாக பங்கஜ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சம்மந்தப்பட்ட வங்கிக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதோடு தும்ரா காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி விஜய் பகதூர் தெரிவித்துள்ளார்.
சீதாமர்கி மாவட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பிரதான கிளை மேலாளர் சுதன்ஷூ குமார் ராவ் கூறுகையில், குறிப்பிட்ட அந்த ஏடிஎம்.ல் தனியார் நிறுவனம் மூலம் தான் பணம் நிரப்பப்படுகிறது. எனினும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் தான் ஏடிஎம்.ல் வைக்கப்படும்.
தற்போது அந்த ஏடிஎம்.க்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பங்கஜ்குமாரிடம் போலி ரூபாயை கொடுத்து யாரோ ஏமாற்றியுள்ளனர். எனினும் புகார் குறித்து விசாரிக்கப்படுகிறது என்றார்.
கடந்த 6ம் தேதி இந்த ஏடிஎம்.ல் ரூ. 14 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அந்த தனியார் நிறுவனம் நிரப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.