சௌதி அரேபிய அரசு தனது மக்களின் கனடா நாட்டு சொத்துக்களை விற்க உத்தரவு

ரியாத்

சௌதி அரேபிய அரசு தனது குடிமக்களுக்கு கனடாவில் உள்ள சொத்துக்களை உடனடியாக விற்று விடுமாறு ஆணை இட்டுள்ளது.

கனடா அரசு சமீபத்தில் சௌதி அரேபியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கடுமையாக குற்றம் சாட்டியது.   அத்துடன் சௌதி அரசு மனித உரிமை ஆர்வலர்களை சட்டத்துக்கு எதிராக சிறை பிடித்துள்ளதாகவும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது.  தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சௌதி எச்சரித்தும் கனடா அதை கண்டு கொள்ளவில்லை.

இதை ஒட்டி கனடா அரசு மீது சௌதி அரேபிய அரசு கடும் கோபம் கொண்டது.    அதை ஒட்டி சௌதியின் தலைநகர் ரியாத்தில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.  அத்துடன் கனடாவில் அமைந்துள்ள சௌதி அரேபிய தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டது.

அத்துடன் கனடா நாட்டுடனான வியாபாரத் தொடர்புகளையும் சௌதி அரேபியா படிபடியாக நிறுத்தத் தொடங்கி உள்ளது.     கனடாவுக்கு செல்லும் நேரடி விமான சேவைகளை சௌதி நிறுத்தி விட்டது.   சுமார் 7000 சௌதி அரேபிய மாணவர்கள் கனடா நாட்டில் கனடா அரசு உதவியுடன் படித்து வருகின்றனர்.  அவர்களை உடனடியாக நாடு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

சௌதி அரேபிய மக்கள் பலர் கனடா நாட்டில் வசித்து வருகின்றனர்.   அவர்களுக்கு கனடாவில் வீடு, பங்குகள், வங்கிக் கணக்குகள், ரொக்கம் என பல சொத்துக்கள் உள்ளன.    இவைகளை உடனடியாக விற்று விட்டு சௌதி அரேபியாவுக்கு திரும்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஒட்டி வளைகுடா பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   சௌதி அரேபியாவின் இந்த நடவடிக்கையால் வளைகுடா நாடுகளுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் முழுவதுமாக நின்று போக வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.     இது குறித்து சௌதி அரேபிய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
English Summary
Saudi arabia orders its citizens to sell all canada assets immediately