ஜெயலலிதா பலவிதங்களில் சிறப்பு குணம் வாய்ந்தவர். பொது மேடைகளில்கூட அவருக்கென்று தனித்துவமிக்க சிறப்பு இருக்கை அமைக்கப்படும். பலமுறை, அவரைத்தவிர மேடையில் உள்ள வேறு எவருக்கும் இருக்கை போடப்படாமலும் இருந்ததது உண்டு.
அவர் பறந்த ஹெலிகாப்டரைக்கூட, மேலே நோக்கி வணங்கும் தன்மை கொண்டவர்கள், அ.தி.மு.க.வினர்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிச.5 அன்று மரணமடைந்தார். அதன் பிறகு,முதல்வராக  ஓபிஎஸ்சும் , ஏனைய அமைச்சர்கள் அப்படியே தொடர்கின்றனர்.
ஜெயலிதா வகித்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா வரவேண்டுமென்று கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் ஒரு மனதாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருணாஸ் – ஜெ, பாலசுப்ரமணியன் – சசிகலா

இந்த நிலையில்,  அதிரடியான பல மாற்றங்கள் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ளன. ஜெயலலிதா வசித்த போயஸ் இல்லத்தில் சசிகலா மற்றும் அனைத்து சொந்தங்களும் மீண்டும் வசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த மாற்றங்களில் ஒன்றாக, போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலியில் அமரந்து விருந்தினர்களை சந்திக்கத் துவங்கியுள்ளார் சசிகலா.
சசிகலாவை நேற்று தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தன் சந்தித்தார். அப்போது அவரை வரவேற்று பேசிய சசிகலா முதன் முறையாக ஜெயலலிதா அமரும் நாற்காலியில் அமர்ந்து அவரை சந்தித்தார்.
பொதுவாக ஜெயலலிதா விஐபிக்களை அந்த அறையில் ஒரு குறிப்பிட்ட நாற்காலியில் அமர்ந்துதான் சந்திப்பார். பிரதமர் மோடி வந்த போது மட்டுமே நாற்காலி மாற்றப்பட்டது.
ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர்ந்ததன் மூலம் ஜெயலலிதா இடத்திற்கு முழுமையாக சசிகலா வந்துவிட்டார் என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.