ருமானத்துக்கு அதிகமாக சொத்துச்சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் அடைக்கப் பட்டனர். அவர்கள்  சிறையில் அடைக்கப்பட்டு  வரும் 15ந்தேதியுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  4ஆண்டுகள் தண்டனையில், 3 ஆண்டுகள் சிறைவாசத்தை  முடிக்க உள்ள சசிகலா, சிறை நன்னடத்தை விதிகள் காரணம் மற்றும் பாஜகவின் ஆசிர்வாதத்தால் முன்கூட்டியே விடுதலை ஆக உள்ளார்.

இந்த விவகாரத்தில்  பாஜக என்ன சித்து விளையாட்டு விளையாடப்போகிறது என்பது போகப் போகத் தெரிய வரும்… ..

சொத்துக்குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை:

ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் 1991-96 ம் ஆட்சியின்போது வரலாறு காணாத அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடியது. இது தொடர்பாக, அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஜெயலலிதா, அவரது உடன்பிறவா சகோதரியான  சசிகலா, அவரின் உறவினர்களான  இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக  ரூ.66.65 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை தாண்டி, உச்சநீதி மன்றத்தின் உத்தரவின்பேரில், பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல்  டிகுன்ஹா முன்பு நடைபெற்று வந்தது. வழக்கில், ஜெயலலிதா மற்றும் சசிகலா, அவரது குடும்பத்தினர்  உள்பட 4 பேரும் குற்றவாளி என , கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி  அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை யுடன், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பதவி பறிபோனது. விசாரணைக்கு ஆஜரான 4 பேரும் உடனடியாக  கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதையடுத்து, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை  எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி,  ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் அல்ல என்று கூறி விடுவித்து உத்தர விட்டார்.

இதை எதிர்த்து திமுக தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம், கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி அதிரடியாக உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஜெயலலிதா இறந்துவிட, சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் பிப்ரவரி 15ந்தேதி 2017ம் ஆண்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு மூண்டு ஆண்டுகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலத்தை ஜெயிலில் கழித்து விட்டால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.

அதாவது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படியும், சிறை நன்னடத்தை விதிகளின்படியும், விசாரணைக் காலத்தின் போது அவர் அனுபவித்த  முந்தைய சிறைத் தண்டனை, கீழ் நீதிமன்ற உத்தரவு போன்ற வற்றால், பிப்ரவரி 14ந்தேதி சசிகலா 1478 நாட்களை நிறைவு செய்கிறார்.

அதாவது பிப்ரவரி 14ந்தேதி அன்றுடன் சசிகலாவின் சிறைவாசம் 1095 நாட்களுடன், ஏற்கனவே விசாரணை காலத்தின்போது 13 நாட்களும், கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் உத்தரவின்படி 22 நாட்களும் சிறைவாசம் அனுபவித்து உள்ளார்.

இத்துடன்  ஏற்கனவே கர்நாடக சிறைத்துறை வழங்கிய நிவாரணம் 121 நாட்கள் உடன் நிலுவையில் உள்ள நிவாரணம்  240 நாட்களும் (கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி) சேர்த்து மொத்தம் அவரது சிறை வாழ்க்கை 1491 நாட்கள் ஆகிவிடும்.. (1095+13+22+121+240=1491) இதில் சசிகலா பரோலில் வந்த நாட்கள் கழிக்கப்பட்டாலும்,  அவரது சிறைவாச நாட்கள் உச்சநீதி மன்ற உத்தரவின்படி 1460 நாட்களை விட அதிகமாகவே  உள்ளது.

இதனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பின் படி, சசிகலா 2021-ம் ஆண்டு பிப்ரவரி 15ந்தேதி  வரை சிறையில் இருக்க வேண்டும்.

ஆனால் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் அவரை  ஒரு ஆண்டுக்கு முன்பாக விடுவிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவது தற்போது கர்நாடக மாநில பாஜக அரசின் கையில் உள்ளது. அரசு வழங்கும் நிவாரணமான 240 நாட்களை வழங்க மறுத்தால், சசிகலா சிறையில் இருக்க வேண்டியதும் கட்டாயமாகி விடும்…

அதே வேளையில் அவர் செலுத்த வேண்டிய அபராத தொகையான ரூ.10 கோடியும் செலுத்த வேண்டியது கட்டாயம். சிறப்பு நீதிமன்ற உத்தரவுபடி, ரூ.10 கோடி அபராதத்தொகையை அவர் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்…

இந்த நிலையில், சசிகலா  சார்பில் ரூ.10 கோடி செலுத்தப்பட்டு விடுமா?  என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், அவரது குடும்பத்தினர் சார்பில், அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா வெளியில் வருவது 99 சதவிகிதம் உறுதியாகி இருப்பதாக மன்னார் குடி வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன…

சசிகலாவை வைத்து தமிழக அரசியல் களத்தில் இறக்கி, பரபரப்பை ஏற்படுத்த  பாஜக தலைமை விரும்புவதாக கூறப்படுவதால், அவர் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

இதற்கிடையில், கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா அங்கு டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ஸ்டவ் உள்பட அனைத்துவித வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்து வந்தது அப்போதைய டிஐஜி ரூபா சிறையில் நடத்திய அதிரடி சோதனை மூலம் அம்பலமானது.   சிறையில் சொகுசாக வாழும் வகையில், அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

மேலும், கடந்த 2017ம் ஆண்டு, நவம்பர் மாத இறுதியில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் 187 இடங்களில் 1800க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 5 நாட்கள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், ரூ 1340 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு,  ரூ 5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 15 லாக்கர்களும் சீல் வைக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்தது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே சிறையில் விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த விவகாரம் குறித்து, அப்போதைய கர்நாடக காங்கிரஸ் முதல்வர், சித்தராமையா உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தினார், விசாரணையில், “சசிகலாவுக்காக பரப்பன அக்ரஹாரா சிறையில் விதி மீறல் நடந்துள்ளது உண்மையே என்று அறிவித்திருந்தும், அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டார்.

அதுபோல, தற்போதைய எடியூரப்பா அரசும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது.

இந்த சூழலில்தான் சசிகலா வரும் 15ந்தேதி பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சட்டப்படி அவரது வழக்கறிஞர்கள் மூலம்  எடுக்கப்பட்டு இருப்பதாகவும், கர்நாடக மாநில அரசு அனுமதி வழங்கியதும் சசிகலா விடுதலையாவார் என அவரது குடும்பத்தினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது…

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி பெரும் தோல்வி அடைந்ததையடுத்து, இரு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை வீசி வருகின்றனர். பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளும் முட்டிக்கொண்டே இருந்தன. சமீப காலமாக தமிழகத்தில் பாஜக அதிமுக இடையே உரசல் அதிகரித்து வருகின்றன.

2021ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்நோக்கி காய்களை நகர்த்தி வருகின்றன. ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், கமல்ஹாசன் களத்தில் குதித்து டஃப் கொடுத்து வரும்  நிலையில், ரஜினியும் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பிரபல அரசியல் கட்சிகளே தடுமாறி வரும் நிலையில், தலையே இல்லாத உடலாக தமிழகத்தில் காணப்படும் பாஜக-வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்சிஆர் போன்ற சட்டங்களுக்கு தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதை கருத்தில் கொண்டே,   எடப்பாடி தலைமையிலான அதிமுக-வுக்கு செக் வைக்கும் நோக்கில், சசிகலாவை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுவித்து, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது…

ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்று பலர் சசிகலாவை வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் நிலையில், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசும், அமைச்சர்களும்  திக்… திக் மன நிலையில் இருந்து வருகின்றனர்…

சசிகலா ஆசிர்வாதத்தோடு, ஓபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தி முதல்வர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி, அதிகாரத்திற்கு வந்ததும், ஓபிஎஸ் உடன் இணைந்து, சசிகலா, டிடிவி தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்ததோடு, அவர்களை மீண்டும் கட்சிக்குள் நுழைய முடியாதபடி காய்களை நகர்த்தி வருகிறார்.

இதனால் எடப்பாடி மீது கடும் கோபத்தில் சசிகலா இருந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய அதிமுக அரசு மீதும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

சசிகலா மீது வருமான வரித்துறை மற்றும் சிறை விதிமீறல் வழக்குகள்  நிலுவையில் இருக்கும் நிலையிலும், அவர் வரும் 15ந்தேதி விடுதலை செய்யப்பட்டால், அது பாஜகவின் அரசியல் தில்லுமுல்லுவாகத்தானே  இருக்க முடியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்…

சசிகலாவை  பகடைக்காயாக வைத்து அதிமுகவை சிதைக்க  பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவும் நிலையில், ஆட்சியாளர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்….

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…