சர்க்கார் சர்ச்சை: தியேட்டர்களில் இன்று பகல் காட்சி ரத்து?

சென்னை:

ர்க்கார் படத்துக்கு தமிழக அரசும், அதிமுகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களில் போராட்டம் நடத்துவதால் படங்களை திரையிட தியேட்டர்கள் மறுத்து உள்ளது.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் முருகதாஸ் மற்றும  நடிகர் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் பழ.கருப்பையா முதல்-அமைச்சராகவும், ராதாரவி அமைச்சராகவும் வருகிறார்கள். பழ.கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமி நடித்துள்ளார். படத்தில் அவரது பெயர் கோமளவள்ளி என்று உள்ளது. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயர்.

மேலும் படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச மிக்சி கிரைண்டர்கள் போன்றவற்றை உடைத்து தீயிட்டு கொளுத்துவதாகவும் காட்சிகள் அமைந்துள்ளது. இது தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அதுபோல  அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் மெத்தனமாக செயல்படுவதாக விஜய் சாடும் வசனம் உள்ளது. டெங்கு காய்ச்சலை ஒழிப்பதில் சரியாக செயல்படவில்லை என்று விமர்சிக்கும் வசனமும் உள்ளது.

இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினர் தியேட்டர்களில் புகுந்து கலாட்டா செய்தனர். அதைத் தொடர்ந்து தியேட்டர் அதிபர்கள் சர்க்கார் படத்தை திரையிடுவதை நிறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக பணிந்தது. அதைத் தொடர்ந்து,  சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கும் பணி தொடங்கி உள்ளது. இதை தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர்  உறுதிப்படுத்தி உள்ளார்.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் சர்க்கார் ஓடிக்கொண்டிருந்த பல தியேட்டர்களில் இன்று பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தஞ்சையில் ஜூபிடர், சாந்தி தியேட்டரில் சர்கார் படத்தின் பகல் காட்சி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இன்று பிற்பகல் அல்லது மாலை காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sarkar controversy: Canceling noon show in theaters?, சர்க்கார் சர்ச்சை: தியேட்டர்களில் வருவாய்த்துறை ரெய்டு
-=-