ஆண் குழந்தைக்கு தாயான சானியா மிர்சா!!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஷோயிப் மாலிக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

sania

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனை சானியா மிர்சா. இவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2016), விம்பிள்டன் (2015), யூ.எஸ்., ஓபன் (2015) சாம்பியன் பட்டமும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸி., ஓபன் (2009), பிரஞ்சு ஓபன் (2012), யூ.எஸ்., ஓபன் (2014) சாம்பியன் பட்டமும் வென்று அசத்தியுள்ளார்.

சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த சானியா, கடந்த 2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் வீரரை திருமணம் செய்து கொண்ட போதும் சானியா தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.

சானியா விரைவில் தாயாகவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 7 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் சானியா மிர்சா டென்னிஸ் விளையாடியது குறிப்பிடத்தக்கது. கர்ப்பமாக சானியா டென்னிஸ் விளையாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி, வைரலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சானியா மிர்சா மற்றும் ஷோயிப் மாலிக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஷோயிப் மாலிக் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். ஷோயிப் தனது டிவிட்டர் பதிவில், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களுக்காக வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் ஷோயிப் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு விளையாட்டு மற்றும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.