திருச்சி: மணல் விலை யூனிட் ரூ.1000 என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், ரூ.4000க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும், அரசு மணல் குவாரிகள் காண்டிராக் டர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்கள் மூலம்  மணல் விற்பனை செய்யப்படுகிறது லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்புச் சங்கம், நாமக்கல் தென்சென்னை மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் இணை சங்கங்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ராயல் ஓட்டல் கூட்ட அரங்கில் மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்புச் சங்க மாநிலத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். தென்சென்னை மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் மயிலை செல்வம், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன் சிவகுமார் உள்ளிட்டோர் சங்க நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் ராஜசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

தமிழகத்தில் மணல் குவாரிகள் இணையதளம் மூலம் (Online) விற்பனை செய்யப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால்,  தற்போது தமிழ்நாடு, அரசு மணல் குவாரிகளில் இருந்து, மணலை ஆற்றிலிருந்து லாரிகளுக்கு லோடு செய்வதற்கு கான்ட்ராக்டர்களை  நியமித்துள்ளது என்று குற்றம் சாட்டியவர்,  அவர்கள் ஆற்று படுகையின் உரிமையாளர் போல் செயல்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.

முதல்வர் அறிவித்ததோ ஆற்றுப்படுகையில் மணல் விலை ஒரு யூனிட் 1000 ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், ஆனால் மாறாக ஆற்றுப்படுகையில் ஒரு யூனிட் மணல் 4500 க்கு விற்கப்படுகிறது. திறக்கப்பட்ட அனைத்து மணல் குவாரிகளும் அரசு மணல் குவாரிகளாக செயல்படுகின்றனவா? அல்லது முழுவதுமாக கான்ட்ரர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு கணிம வளங்கல் நாள்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பு அளவிற்கு கொள்ளையடிக்கப்பட்டு (திருடப்பட்டு) வருகிறது. இதனை அந்த துறையை சார்ந்த அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்வதில்லை இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

பெயரளவிற்கு இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்ட சுமார் 35 முதல் 50 லாரிகளுக்கு மட்டுமே பொதுப்பணித்துறையின் கணினி அனுமதிசீட்டு (Barcode Permit) வழங்கப்படு கிறது. இது இல்லாமல் இவர்களாவே ஒவ்வொரு குவாரியிலும் அதிகபடியாக போடும் சுமார் 400 முதல் 600 லாரிகள் வரை கள்ளத்தனமாக லாரிகளுக்கு லோடு போடுகிறார்கள்.

இந்த லாரிகளுக்கு வழங்கப்படும் பர்மீட்டுகள் பொதுப்பணித்துறையின் அனுமதி சீட்டுகள் போலவே போலித்தனமான கருவிகள் மூலம் (Barcode Permit) கணினி அனுமதி சீட்டு அரசு அளிப்பது போலவே தயாரித்து வழங்கி வருகிறார்கள்.

இவர்கள் வழங்கும் போலி பார்கோடு அனுமதி சீட்டை வழியில் அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தும் போது பல இடங்களில் இது போலியானவை என அதிகாரிகள் தெரிவித்து லாரிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்கிறார்கள் அல்லது அதிகாரிகள் லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்கள்.

வஞ்சம் கொடுக்கப்பட்ட வாகனங்கள் போலி பர்மீட்டுக்களாக இருந்தாலும் விடுவிக்கப்படுகின்றன. இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளரோ அல்லது உதவி செயற்பொறியாளரோ கண்டு கொள்வதே இல்லை, மேலும் இது போன்ற கோரிக்கைகளை நேரில் சென்று அவர்களிடத்தில் கொடுக்க சென்றால் அவர்கள் அங்கு இருப்பதில்லை. அங்குள்ள அலுவலர்கள் அவர்களுடைய தொலைபேசி எண்ணையும் கொடுப்பதற்கு மறுக்கிறார்கள்.

அரசு நிர்வாகம் இவ்வாறு இருக்கும் போது நாங்கள் லாரி உரிமையாளர்கள் என்ன செய்வது யாரிடம் போய் சொல்வது. ஆகையால் உண்மையாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆன்லைனில் பணம் தரப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட பிறகு தான் வாகனங்கள் ஆற்றுப்படுகைக்கு அனுப்ப பட வேண்டும்.

கூண்டில் வாகனங்கள் அடைத்து வைக்கப்பட்டு அனுப்பப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். தற்போது 6 சக்கர லாரிகளுக்கு 1 பக்கெட் மணல் 1000 ரூபாய் வீதம் 8 பக்கெட் மணல் ரூபாய் 8 ஆயுரமும், 10 சக்கர லாரிகளுக்கு 1 பக்கெட் மணல் 1,250 ரூபாய் வீதம் 13 பக்கெட் மணல் ரூபாய் 16 ஆயிரமும் குத்தகைதாரர்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது..

எனவே,  6 சக்கர வாகனங்களுக்கும், 10 சக்கர வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான விலை விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் எங்களுக்கு அரசு அனுமதித்து உள்ள 6 சக்கர லாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட லோடு எடை 12,000 கிலோ மற்றும் வண்டியின் காலி எடை 6,200 கிலோ ஆக மொத்தம் 18,200 கிலோ அளவும் மற்றும் 10 சக்கர லாரிக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட 18 ஆயிரம் கிலோ எடை மற்றும் காலி எடை 10 ஆயிரத்து 200 கிலோ ஆக மொத்தம் 28, 200 கிலோ அளவுகளின் படி எங்களுக்கு லோடு செய்ய அரசு முன்வர வேண்டும்.

ஓவர் லோடு ஏற்றுவதற்கு எங்களை கட்டாயப்படுத்தக் கூடாது. குண்டர்களை வைத்து லாரி உரிமையாளர்கள் மிரட்டுவது தடுக்கப்பட வேண்டும். கூடுதல் பக்கெட்டுகள் எங்களுக்கு தேவையில்லை. மேலும் இது சம்பந்தமாக பல கனிம வள கொள்ளை சம்பவங்களை நாங்கள் ஆதாரத்துடன் வெளியிடவும் தயாராக உள்ளோம். இதுபோன்று கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை தடுத்து நிறுத்த வேண்டிய பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை காவல்துறை, கனிமவளத்துறை, அதிகாரிகள் மாவட்டத்தின் தலைநகருக்கு அருகாமையில் இருந்தும் கண்டும் காணாதது போல் கண்களை மூடிக்கொண்டு கடமையை செய்ய தவறுவதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தகவல்கள் தந்து நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்த வேண்டாம்.

இக்கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

அரசு கூறியபடி மலிவு விலையில் மணலை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை. இவை அனைத்தும் பொய் கிடையாது. வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரிந்தே இந்த விஷயங்கள் நடக்கிறது. மேலும் மணல் தரம் இல்லை என்று கூறி மக்கள் மணலை வாங்க மறுத்து விடுகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு 8000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நாசமாகிவிட்டது என்றார்.

நன்றி: ஐநியூஸ் தமிழ்