டில்லி,

நாடெங்கிலும் 128 புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் காரணமாக வரும் செப்டம்பர் மாதம்  முதல் இந்த புதிய சேவைகள் தொடங்கப்படும் என தெரிகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில், சேலத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்.

உள்நாட்டு விமான சேவையில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா. இதன் காரணமாக உள்நாட்டு விமான சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 500 கிலோ மீட்டருக்கு 2500 ரூபாய் என்கிற அடிப்படையில் நாட்டில் 128 புதிய வழித்தடங்களில் விமான சேவைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் குறித்த முதல்கட்ட ஏலம் நேற்று டில்லியில் நடைபெற்றது. இதில், இதில் ஏர் டெக்கான், ஏர் ஒடிசா, அலைன்ஸ் ஏர், ஸ்பைஸ் ஜெட் மற்றும் டர்போ மேகா ஆகிய 5 நிறு வனங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.

இதன் காரணமாக தமிழகத்தில் செயல்படாமல் இருக்கும் சேலம் விமான நிலையம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விமான சேவை ஏற்படுத்தப்படும். சேலத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு விமான சேவை ஏற்படுத்தப்படும்.

இந்த விரிவாக்கத் திட்டத்திற்காக மத்திய அரசு 205 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா கூறியுள்ளார்.