சபரிமலை கோயிலில் அடுத்த சர்ச்சை: பெண் ஊழியர்களை நியமிக்கிறது  தேவசம்போர்டு  

பரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆதரவும் எதிர்ப்புமாக கருத்துக்கள் வெளிப்பட்டு வரும் நிலையில், கோயிலில் மண்டல பூஜையின் போது பெண் ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் வருடம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. . வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘வயதைக் காரணம்காண்பித்து பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உண்டு’’ என்று தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  தீர்ப்பை எதிர்த்த கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என இந்துமத அமைப்புகள் சில கோரிக்கை வைத்து வருகின்றன.  அதனை ஏற்க முடியாது என கேரள அரசு மறுத்து விட்டது.

பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு முன் வந்துள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யும் வரையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என பந்தளம் அரச குடும்பத்தினரும், சபரிமலை கோயிலில் பூஜை நடத்தி வரும் தந்திரி மற்றும் அவரது குடும்பத்தினரும் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு ஆணையர் வாசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கூடுதலாக பெண் ஊழியர்களை வேலைக்கு நியமிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என இந்து அமைப்புகள் சில வலியுறுத்தியுள்ளன.

அதேசமயம், ‘‘மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்தில் பம்பையில் ஏற்கெனவே பெண் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். வயது வந்த பெண்கள் கோயிலுக்கு செல்லாமல் தடுக்கும் பொருட்டு சோதனை செய்வதற்காக இவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.  தற்போது கூடுதலாக பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இதில் தவறு ஏதுமில்லை’’ என திருவாங்கூர் தேசவம் போர்டு விளக்கம் அளித்திருக்கிறது.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: sabarimala : devaswom board decision to appoint female employees
-=-