அகமதாபாத்: உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியில், உத்தர பிரதேஷூக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா வீரர் ருதுராஜ் கெய்க்வாட்  ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு புதிய உலக  சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை தொடங்கி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் தமிழ்நாடு வீரர்கள் நாராயண் ஜெகதீசன் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய இருவரின் அபாரமான பேட்டிங்கால் தமிழ்நாடு அணி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது.  தமிழ்நாடு அணியின்  தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி சாதனை படைத்த நிலையில், இந்த 5 போட்டிகளிலும் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் அசாம் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக முன்னேறின.  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதிய போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான போட்டியில் உத்தர பிரதேச அணியும், ஜார்கண்ட்டுக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணியும் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறின.

நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின்  உத்தரப் பிரதேசம் – மகாராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற உத்தரபிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மகாராஷ்டிரா அணி களமிறங்கியது. ஆட்டத்தின் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது.

அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும். மேலும்,  இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய உலக சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார்.

கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர்களை பெற காரணமாக இருந்த பவுலர், உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்,  விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் 220 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டியில் அவர் 16 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் விளாசி உள்ளார்.