சென்னை: தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலையிலும் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக  அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்  நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  வளர்ச்சி பணிகள் குறித்த மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில், திட்ட இயக்குநர் தண்டபாணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி ‘‘மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இரு கிராமங்களுக்கு ஒரு கிளஸ்டர் தொடங்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி அளவுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மு

தல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி நிலவும் சூழ்நிலையிலும் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க முதல்வர் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அனைத்து பள்ளி கட்டிடங்களும் சீரமைக்கப்படும்’’

இவ்வாறு கூறினார்.