கோயமுத்தூர்: கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சென்னை எழிலகத்ததில் உள்ள  போக்குவரத்துதுறை அலவலகத்தில் தமிழக போக்குவரத்து துறை  துணை ஆணையராக இருப்பவர் நடராஜன் அறையிலும், அவரது உதவியாளர் முருகன் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், 35 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது. இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் கோவையில் ரூ.28 லட்சம் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றி வருபவர் உமாசக்தி. இவர் அதிகாரிகளிடம் மாமூல் வசூலிப்பதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. அந்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி திவ்யா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது   கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையர் உமா சக்தி வாகனத்தில் இருந்து ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த பணம் வைத்திருந்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இவரது காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட போக்குவரத்து அலுவலகங்களில் மாதம், மாதம் வாங்க கூடிய மாமூல் பணம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த பணத்தை இதற்கு முன்பு பணியாற்றிய ஆபிஸ் அசிஸ்டன்ட் செல்வராஜ் என்பவர் மூலம் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம்  அலுவலகத்தில் பணியாற்றிய மற்ற அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை  நடத்தினர். அவர் இதுவரை  எவ்வளவு லஞ்சமாக பணம் பெற்றார்? மேலும் அந்த பணத்தின் மூலம் சொத்துக்கள் ஏதேனும் வாங்கியுள்ளார் அல்லது அவரது உறவினர்கள் பெயரில் சொத்துக்களை ஏதேனும் வாங்கி குவித்துள்ளார் என்பது குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்