சென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தை ஜூலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரியில் உயர்கல்வி படிக்க உதவியாக மாதம் ரூ.1000  உதவித் தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இன்று  தலைமைச் செயலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்  உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,  “அரசுப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், எல்லாவற்றிலும் சேர்த்து, தொழிற் கல்வி (Vocational Course) படித்த மாணவர்களுக்கு இரண்டு சதவீத இடஒதுக்கீடு கொடுத்து, அனைத்து இடங்களிலும், தொழிற் கல்வி படித்த மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. எனவே இநதாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில்  தொழிற் கல்வி படித்தவர்களுக்குஇரண்டு சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும்.

6முதல் 12-ம்வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த பெண்களுக்கு, ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகை தொடர்பாக நிறைய விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. முதல் நாளிலேயே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இதுதொடர்பாக ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது. 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த பெண்கள், எந்தக் கல்லூரியில், எத்தனை பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கணக்கையும் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த தகவல்கள் சரியாக உள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொண்டிருக்கிறோம். இவையெல்லாம் சரி செய்யப்பட்ட பின்னர்,  ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை ஜூலை மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைப்பார் என்றார்.

மேலும் கூறியவர், கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்னர்தான் தொடங்கப்படும். ஆனால்,   தனியார், அரசு கலைக் கல்லூரிகளில் வரும் ஜூலை 18-ம் தேதி முதல் இரண்டாம் ஆண்டு வகுப்புகளும், மூன்றாம் ஆண்டு வகுப்புகளும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.