கோவா: ரூ.1.44 லட்சம் கோடி சுரங்க ஊழல்….மனோகர் பாரிக்கர் மீது முன்னாள் பாஜக முதல்வர் புகார்

பனாஜி:

ரூ.1.44 லட்சம் கோடி சுரங்க அனுமதி ஊழலில் மனோகர் பாரிக்கரின் வழியை தான் பின்பற்றியதாக கோவா முன்னாள் முதல்வர் லஷ்மிகாந்த் பார்சேகர் தெரிவித்துள்ளார்.

2014-15ம் ஆண்டில் 88 சுரங்கங்களுக்கு அனுமதி புதுப்பித்த விவகாரத்தில் கோவா முன்னாள் முதல்வர் லஷ்மிகாந்த் பார்சேகர் விசாரணையை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இந்த அனுமதிக்கான கொள்கை மனோகர் பாரிக்கர் இதற்கு முன்பு முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் வடிவமைக்கப்பட்டது என்று லஷ்மிகாந்த பார்சேகர் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரத்தில் லஷ்மிகாந்துக்கும், 2 மூத்த அதிகாரிகளுக்கும் லோக் ஆயுக்தா நேற்று சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். அப்போது தான் உண்மை வெளி வரும் என்று 61 வயதாகும் பாஜக மூத்த தலைவர் லஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘சுரங்க அனுமதியை 2வது முறை புதுப்பித்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன். அது மாநில அரசின் கொள்கைப்படி தான் செய்யப்பட்டது. இந்த கொள்கைக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உயர்நீதிமன்ற அறிவுரைப்படி முன்பு மனோகர் பாரிக்கர் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் தான் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டது.

அதனால் மனோகர் பாரிக்கர் வழியை தான் நான் பின்பற்றினேன். லோக் ஆயுக்தா இதை விரைந்து முடித்தால் தான் உண்மை வெளிவரும். என் மீது 1.44 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது சிறிய தொகை கிடையாது’’என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rs 1.44 kakh crore mine renewal scam Former Goa chief minister Laxmikant Parsekar accused Manohar Parrikar previous tenure as chief minister, கோவா: ரூ.1.44 லட்சம் கோடி சுரங்க ஊழல்....மனோகர் பாரிக்கர் மீது முன்னாள் பாஜக முதல்வர் புகார்
-=-