சென்னை: சென்னை மெரினாவில் ரூட் தல விவகாரத்தில் கத்தியால் வெட்டிய விவகாரத்தில் மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ️ஏற்கனவே 2 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கவியரசு, கஞ்சய், வெங்கடேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் சிலரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடையே ரூட் தல எனப்படும் கல்லூரி தலைவன் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஒரே கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதுவதுடன், மற்ற  கல்லூரி மாணவர்களுடனும் மோதல் ஏற்படுகிறது. இதனால், கத்தி, கம்புகளைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற அராஜக செயல்களை தடுக்க வேண்டிய காவல்துறை, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் வெறும் எச்சரிக்கை மட்டும் செய்வதால் மாணவர்களின் மோதல் போக்கும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே மெரினா கடற்கரையில் மாநில கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொரவர் ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட விவகாரத்தில், தலைமறைவாக உள்ள 20 மாணவர்களை போலீசார் வீடியோ பதிவு மூலம் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மாநில கல்லூரியில் படிக்கும் சுனில் என்ற மாணவனுக்கும், சூர்யா என்ற மாணவனுக்கும் இடையே ரூட் தல பிரச்னை இருந்து வந்தது. இதனால் சூர்யா தரப்பு மாணவர்கள் சுனிலை அவர் இறந்ததாக போட்டோவை மார்பிங் செய்து கல்லூரி மாணவர்கள் குரூப்பில் படத்தை பதிவு செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த சுனில் மற்றும் ரூபன் தரப்பு மாணவர்கள் 8 மாதங்களுக்கு முன்பு மோதிக் கொண்டனர். இதுகுறித்து அப்போது அண்ணாசதுக்கம் போலீசார் இரு தரப்பு மாணவர்களை நேரில் அழைத்து இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எழுதிவாங்கி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சுனிலின் பழைய புகைப்படத்தை வைத்து சூர்யா தரப்பு மாணவர்கள் மீண்டும் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரூட் தலையான ரூபனிடம் கூறி அழுதுள்ளார். உடனே ரூபன் தரப்பை சேர்ந்த துரைப்பாக்கம் பெரிய ஒப்புலாபுரத்தை சேர்ந்த பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வரும் அன்பரசு(20), திருவள்ளூர் மாவட்டம் பெத்திகுப்பத்தை சேர்ந்த தனுஷ்(19), சுனில் உள்ளிட்ட மாணவர்களை கேலி செய்த சூர்யா தரப்பு மாணவர்களை பழிவாங்க மெரினா கடற்கரையில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை பின்புறம் ஆயுதங்களுடன் தயாராக இருந்துள்ளனர்.

இதுகுறித்து சூர்யா தரப்பு மாணவர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்களும் தங்களது ஆதரவு மாணவர்களுடன் பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பும் மோதிக்கொண்டனர்.

ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மோதிக்கொண்டதால் மெரினா கடற்கரை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் எதிர்தரப்பை சேர்ந்த சூர்யா அவரது நண்பர்களான 3ம் ஆண்டு படித்து வரும் நவீன், சூர்யபிரகாஷ் ஆகியோருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதும் அங்கு மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கு படுகாயங்களுடன் இருந்த 3 மாணவர்களை போலீசார் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் படுகாயமடைந்த எதிர்தரப்பு மாணவரான சூர்யா சம்பவம் குறித்து மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி, மோதலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது போலீசார் ஐபிசி 147, 148, 341, 294(பி), 324, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்(19), சுனில்(20) ஆகியோரை கைது செய்தனர்.

மோதலில் ஈடுபட்ட 20 மாணவர்களை போலீசார் வீடியோ பதிவுகளை வைத்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பு மாணவர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக இன்றும் இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மீண்டும் மோதல் சம்பவம் ஏற்படாமல் தடுக்க மாநில கல்லூரி முன்பு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க அருகதையற்றவர்கள். அவர்களை உடனே கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும், தவறுக்கு உரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும்,  என்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.