புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால், இந்திய உணவகத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, டெலிவரி என்பதைவிட, பரிமாறுதல் சேவைதான் தொழிலை மீட்பதற்கு ஏற்றது என்று ஹோட்டல்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் கிரில், டிஆர்இஎஸ், த ஆர்ட்ஃபுல் பேக்கர், ஸாம்பார் மற்றும் ஆசியா செவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல பிரபல ரெஸ்டாரண்டுகளின் நிலை இதுதான்.
ஊரடங்கிற்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், தற்போது 20% முதல் 30% வியாபாரமே நடப்பதாக அவற்றின் சார்பாக தெரிவிக்கப்படுகின்றன. முதல் ஊரடங்கு நடவடிக்கையிலிருந்து ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டாலும், உணவு பார்சல் மற்றும் டெலிவரிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்த நிலை ஹோட்டல் தொழிலுக்கு உதவவில்லை. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியில் உணவருந்தவே அஞ்சுவதால், நாடு முழுவதும் அத்தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற ஹோட்டல்கள் நெருக்கமாக உள்ள பெருநகரங்களில் நிலை இதுதான். தற்போதைய நிலையில், பல்வேறு காரணங்களால், நாட்டின் 40% உணவகங்கள் இன்னும் மூடப்பட்டுதான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.