சென்னை:

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மெரினாவில் நடந்த போராட்டத்தில் ஊடுறுவிய சமூக விரோதிகள், தேச விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 40 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டனர். 51 போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோவை போலீஸ் எரித்ததாக கூறப்படும் புகார் உள்ளிட்ட இதர சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சகஜ நிலை ஏற்படுத்தவும், பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் மாநகர் முழுவதும் கூடுதல் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவல்நிலையத்துக்கு தீ வைத்த ஆசாமி அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மெரினாவில் பாதுகாப்பு பணிக்கு பயிற்சி பெற்று வரும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தமிழ்நாடு ரிசர்வ் போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தை அமைதியான வழியில் முடிக்க வேண்டும் என்று தான் போலீஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், துஷ்டர்கள் இந்த வழியில் முடிக்கச் செய்துவிட்டனர். குடியரசு தின விழா நெருங்கி வருவதால் ரோந்து பணிக்கு பிற மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை குறைந்தபட்ச போலீசார் தான் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுய நல திட்டங்களுடன் சிலர் போராட்டத்திற்குள் நுழைந்திருப்பதாக உளவுத் துறை தகவல் கிடைத்தது. இதன் காரணமாக தான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.