டில்லி,

மிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக காட்சிப்படுத்த கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்தத்தில் இன்று ஜனாதிபதி கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இளைஞர்களின் தன்னெழுச்சி காரணமாக ஜல்லிக்கட்டு போராட்டம் அமிம்சையான முறையில் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டு உள்ளது. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி தங்களது ஆதரவை உறுதி செய்து வருகின்றனர்.

தமிழர்களின்  போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் இயற்ற கோரி தமிழக முதல்வர்  பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது, மத்திய அரசு இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய இயலாது என்றும்,   தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதாக கூறிய பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என கூறினார்.

அதைத்தொடர்ந்து  ஜல்லிக்கட்டு வழக்கில்  ஒரு வாரத்திற்குள் தீர்ப்பை வெளியிட கூடாது சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்ட தாக அட்வகேட் ஜெனரல் முகுல் ரத்தோகி தெரிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசர சட்டம் பிறப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து டில்லியில் சட்ட நிபுணர்களுன் ஆலோசனை நடத்திய முதல்வர் பன்னீர், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிருந்து காளையை நீக்கம் செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சட்ட வரைவை தயார் செய்தது தமிழக அரசு.

அதை உடனடியாக  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை, சட்ட துறை, உள்துறைக்கு அனுப்பி வைத்தது. மத்திய  அமைச்சகங்கள் ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து  சட்ட வரைவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று  அவசர சட்டத்துக்கு அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படு கிறது. பின்னர், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்குவார். இதற்காக, கவர்னர் வித்யாசாகர் இன்று இரவு சென்னை வருகிறார்.

இன்று இரவே அவர் கையெழுத்திட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், நாளையே ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிகிறது.

ஏற்கனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்த தயாராக இருப்பதாக மதுரை கலெக்டர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.