சென்னை: நாளை மறுதினம் (26ந்தேதி) குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென் ன கடற்கரை காமராஜர் சாலை  உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசு தின விழாவையொட்டை நடைபெற உள்ள அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை நடைபெற்றது.

நாடு முழுவதும் 73 வது குடியரசு தின விழா வருகின்ற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு முதல்முறையாக கொடியேற்றி வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பாக அலங்கார ஊர்தி இடம்பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக  எளிய முறையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு சென்னை கடற்கரையில் மீண்டும் கோலாகலமாக கொண்டா டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு, குடியரசு தின விழா மெரினா கடற்கரை எழிலகம் எதிரே அமைந்துள்ள  உழைப்பாளர் சிலை அருகே கொண்டாடப்பட உள்ளது.  இதற்காக அந்த  பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்பட்டு வருகின்றன.

குடியரசு தின விழாவில் பங்கேற்கும், கவர்னர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்,  நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அமரும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

26ந்தேதி குடியரசு தினத்தன்று,  காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச்செயலாளர் இறையன்பு வரவேற்பார்.

அதைத்தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகிறார். அதைத்தொடர்ந்து அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பார்.  தொடர்ந்து,  தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். தேசிய கீதம் இசைக்கப்படும்.

இந்த பணிகள் முடிவடைந்ததும்,  பல்வேறு படை அணியினர் மிடுக்குடன் வந்து தேசிய கொடிக்கும், கவன்ரர் மற்றும் முதல்வருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை கவர்னர் ஏற்றுக்கொள்வார். அதைத்தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட படைப்பிரிவினர் அணி வகுத்து செல்வார்கள்.

அதன் தொடர்ச்சியாக அணி வகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்குவார்.

 அதைத்தொடர்ந்து கண்கவர் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். குடியரசு தினவிழாவையொட்டி,  அன்று  மாலை 4.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைவரையும் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் வரவேற்பார்கள். அனைவருக்கும் அங்கு தேநீர் விருந்து அளிக்கப்படும். அப்போது, சிறந்த சமூக சேவைக்கான விருது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது ஆகியவற்றை உரியவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வழங்குவார்.

குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் அணிவகுப்பு வாகனங்கள், கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. முப்படை, தேசிய மாணவர் படை, காவல்துறையினர் அணிவகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரி  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறுகிறது