சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வாசிப்பு இயக்கம் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

 புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் ஏற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படத் திட்டமிட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று பள்ளிகளில்‌ வாசிப்பு இயக்கம் என்னும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார். இன்று காலை 9:30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் நிகழ்வில் துவக்கி வைத்தார்.

இதுதொடர்பாக பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை தீட்டியுள்ளது.

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8.9-10 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம். படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து ஓவியம் வரையலாம். நாடகம் நடத்தலாம். கலந்துரையாடல் செய்யலாம். நூல் அறிமுகம், புத்தக ஒப்பீடு. மேற்கோள்கள் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல், புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இது போன்ற படைப்புகள் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும்.

இவற்றில் சிறந்த படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர். அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாவட்ட அளவில் வெல்பவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள் என்றும் இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும்  இந்நாட்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும். மேலும், மாணவர்களுக்கான சிறப்பு திகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றது என்று தெரிவித்தனர்.

முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இடையில் நடக்கும் இப்போட்டியில் வெல்வோர் ‘அறிவுப் பயணம்’ என்கிற பெயரில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்படும். இந்தப் பயணத்தில் உலகப்புகழ்பெற்ற நூலகங்கள், ஆவணகாப்பகங்கள் போன்றவற்றைக் காணலாம்.

பள்ளி நூலகங்களையும் பாடவேளைகளையும் முறையாகப்பயன்படுத்தவும், அவற்றின் பயன்பாடு மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு முறையாக மாணவர்கள் ஏற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படவும் நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாகப் பயன்படுத்திடவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.